Sunday, November 4, 2012

அட்டகத்தி & Pizza - விமர்சனம்

 இரண்டு புதிய இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்தேன். 1.அட்டகத்தி 2. Pizza. இரண்டையும், ஒன்றன் பின் ஒன்றாக சற்று சுருக்கமாக விவரிக்கிறேன். ஏன்  சுருக்கமான்னு யோசிக்கிறது புரியிது. மொக்கை படங்களாக இருந்திருந்தால் அக்கு வேறு ஆணி வேறாக கிழித்து கேப்பயை நட்டிருக்கலாம், ஆனால் இவை இரண்டும் நல்ல படங்கள் அதனால் அனைவரும் திரையரங்கம் சென்று பார்க்க வேண்டுமென்பது அடியேனின் ஆசை.   இரண்டு படங்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு

1. தயாரிப்பாளர் C. V. Kumar's Thirukumaran Entertainments
2. இசை: சந்தோஷ் நாராயணன்
3.  படத்தொகுப்பு: Leo John Paul

யார் இன்னா பண்ணா நமக்கு இன்னாபா? படம் நல்லார்ந்த சர்தான்பா  என்பவர்களுக்கு, நேரா Matterக்கு போவோம் நைனா!
அட்டகத்தி:
சென்னை அருகே உள்ள கிராமத்தை பூர்வகுடியாக கொண்ட ஒரு கீழ்தட்டு குடும்பத்தில் பிறந்த தீனா என்னும் இளைஞன் அட்டகத்தியாக இருந்து ரூட்டுதலை ஆவது தான் கதை. கதை, கேட்க ரொம்ப சுமாராக இருந்தாலும், சென்னை மற்றும் சுற்றுப்புற வாழ் மனிதர்களை பிழையாகவே சித்தரித்து வந்த தமிழ் சினிமாவிற்கு கதைகளம் & பாத்திர படைப்பு ரொம்பவே  Fresh. Screenplay & Direction  are detailed & in-depth. Protagonist தினேஷிடம்,  இந்த படத்திற்கு தேவையான  நடிப்பை வாங்கிர்யிருப்பதில் இருந்தே  இந்த கதையில் இயக்குனர் ரஞ்சித் வெகு காலம் பயணித்திருப்பது நன்றாக தெரிகிறது. எந்த பில்ட் அப்பும் இல்லாமல் வந்து வெற்றி பெற்றுள்ள அட்டகத்தி சென்னை சென்னை பூர்வக்குடி மக்களின், குடும்பத்தின், பெண்களின், ஆண்களின்,  இளைஞர்களின் இயல்பு மீறாத பதிவு. Whiskyயை Neatஆகவோ, சோடா தண்ணீர் கலந்தோ அடிப்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம். Seven Up, Sprite கலந்து அடிப்பவர்கள் இந்த படத்தை பார்க்க தேவையில்லை.

Directed by:Pa. Ranjith ( சிறப்பு )
Produced by:C.V.Kumar's Thirukumaran Entertainments ( நல்ல படம் எடுக்கும் தயாரிப்பாளர் ஒரு நல்ல படைப்பாளி)
Screenplay by:Pa. Ranjith ( நன்று )
Story by:Pa. Ranjith (நன்று)
Starring:Dinesh, Nandita, Aishwarya (சிறப்பு)
Music by:Santhosh Narayan (சிறப்பு)
Cinematography:P. K. Varma (சிறப்பு)
Editing by:Leo John Paul (சிறப்பு)
Distributed by:Studio Green (Promoted Well)

Pizza:
Metro City  சென்னையில் ஒரு pizza shopல் வேலை பார்க்கும் மைகேல்  மற்றும் அவனுடைய  living together girl friend அணு ஆகியோரின் வாழ்கையில் வீசும் சிறிய சூறாவளி அவர்கள் வாழ்கையை புரட்டிபோடும் சுவாரசியத்தை, த்ரில்லிங்காக தீட்டியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். இதற்க்கு மேல் இந்த படத்தின் கதையை விவாதித்தால் படம் பார்க்க சுவாரஸ்யம் குறைந்து விடும். தமிழ் நாட்டு இளைஞர்களை இனியும் அட்டு காதலிகளின் பின்னால் அலைந்து, காதல் தோல்வியால் கனத்த இதயத்தோடு இருவது வருடம் வாழும் கல்லூரி மாணவனாக காட்ட முடியாது, இன்றைய இளைஞர்களை நிதர்சனத்தோடு நிழலாட விட்டிருக்கிறார்.  It's a short and sharp movie, better to avoid kids. Kaarthik Subbaraj is gonna  rock the industry.

Directed by:Karthik Subbaraj ( சிறப்பு)
Produced by:C. V. Kumar's Thirukumaran Entertainments (டபுள் சிறப்பு)
Screenplay by:Karthik Subbaraj (சிறப்பு)
Story by:Karthik Subbaraj (நன்று)
Starring:Vijay Sethupathi,Remya Nambeesan (சிறப்பு)
Music by:Santhosh Narayanan (சிறப்பு)
Cinematography:Gopi Amarnath (சிறப்பு)
Editing by:Leo John Paul (சிறப்பு)

மொத்தத்தில் Worth Watching both the Movies!

நன்றி:
பாமரத்தமிழன்

Sunday, September 30, 2012

தாண்டவம் விமர்சனம் (Thaandavam Movie Review)



சமீப காலமாக விக்ரம் அவர்களின் கதை தேர்வில் சற்றும் நம்பிக்கையிழந்த என்னை போன்ற அவரது ரசிகர்களுக்கு, தெய்வத்திருமகன் மூலம் நம்பிக்கை ஊட்டியவர்  இயக்குனர் விஜய். இவர்கள் கூட்டணியில் இரண்டாவது படம் என்பதால் நம்பிக்கையிலும், இயக்குனர் விஜயின் முதல் "action" படம் என்பதால்  மிகுந்த எதிர்பார்ப்பிலும் theatreக்கு சென்றேன்.  அந்த எதிர்பார்ப்பில் சிறப்பாக செம்மண்ணை வாரி தூவியிருக்கிறார் விஜய்.

படத்தின் முதல்பாதி: லண்டன் நகரிலும் சுற்றுப்புறத்திலும், ஒரு Churchல் பியானோ வாசிக்கும் கண் தெரியாத விக்ரம் இரண்டு மூன்று பேரை மட்டை பண்ணுகிறார். எதேட்சையாக அவரை taxiயில் ஒவ்வொரு கொலை கலத்திற்கும் அழைத்துசெல்லும் taxi டிரைவர் சந்தானம், அதை துப்பறிய வரும் உட்டாலக்கடி officer நாசரின் விசாரணை வட்டத்திற்குள் சிக்குகிறார் (காமடியாமா, கருமம் புடிச்சவனுங்க).  இதன் நடுவே Miss. London எமி ஜாக்சன்,  மிஸ் UK ஆகும் லட்சியத்தில் விக்ரமுடன் நட்பு ஏற்பட்டு, நட்பு காதலாகிறது. மட்டமான திரைகதை, மட்டமான காட்சியமைப்பு, சுமாரான் பாடல்கள், பாடல் படமாக்கியவிதம் என்று முதல்பாதி theatreய் விட்டு கிளம்ப தூண்டுகிறது. சந்தானத்தின் commedyயை விட நாசரின் பாத்திரபடைப்பு நல்ல commedy. "அழகிப்போட்டிக்கி அழகும், அறிவும் மட்டும் போதாது, கொஞ்சம் திருட்டு தனம் வேணும், I mean social interest" போன்ற அதிபுத்திசாலிதனமான வசனங்கள் வேறு நம்மை சிலிர்க்க வைக்கிறது.

படத்தின் இரண்டாம் பாதி: விக்ரம் ஒரு ராவான RAW officer, அவரது நண்பர் ஜகபதி பாபு இன்னொரு RAW officer. கோயான் மோயான்பட்டியில் சீயான் விக்ரமிற்கு கல்யாண ஏற்பாடு.  இவருக்கு தெரியாமலேயே, பெண் பார்த்து கல்யாண பத்திரிக்கை அடித்து இவருக்கே அனுப்பி வைக்கும் ஒரு மானம் கெட்ட அம்மா. பையனை பற்றி ஒரு விவரமும் தெரியாமல் கல்யாணத்திற்கு கிளம்பி வந்து கட்டையை குடுக்கும்,  கேடுகெட்ட கண் டாக்டர் அனுஷ்கா என்று நகர்ந்தாலும், அனுஷ்காவின் அழகிலும், நிரவ் ஷாவின்  ஒளிப்பதிவாலும், இரண்டாம் பாதியில் சற்று சாய்ந்து உட்கார முடிகிறது. இது இரண்டையும் தவிர படத்தில் ரசிப்பதற்கு வேறு  எதுவும் இல்லை.  RAW officers என்று ராவாக ராவடி பண்ணிக்கொண்டு திரியும் இவர்களின் சில்லறை தனத்தை பார்த்து நகைச்சுவை கூட ஏற்படவில்லை, மாறாக மாரடைப்பு வந்த இருவரை ஆம்புலன்சில் அள்ளி போனார்கள். அவ்வளவு பாத்திரப்படைப்பும், காட்சியமைப்பும் நம்மை வாட்டி வதைக்கிறது.  இந்தியா தயாரிக்கும் ஒரு சக்தி வாய்ந்த குல்பி குண்டு, அதற்க்கு ஒரு flow chart (இன்னாமே இது, ஒன்னிமே பிரியிலே) அதை உஷார் பண்ணி courierல் அனுப்பும் பிரிட்டிஷ் பெள்ளக்காய் பிஸ்துகள், என்று சற்றும் யோசிக்காமல் சிலிர்க்க வைக்கிறார் இயக்குனர். இந்த பார்சலை தேடி போய் அந்நியர்களிடம் அகப்பட்டு கொள்ளும் விக்ரம். பின் இது எல்லாத்துக்கும் காரணம் இவரது நண்பன் ஜகபதி பாபு என்று தெரிந்து தாண்டவம் ஆட தயாராகும் முன், குண்டு வெடிப்பில் சிக்கி அனுஷ்கா இறக்க, விக்ரம் கண் பறிபோக, முடிகிறது flashback. அப்பறம் எதுக்கு  வெயிட்டிங்கி.... எதிரியான நண்பனை கொள்வதோடு சிரிப்பு போலீஸ் நாசரிடம் சரணடையும் விக்ரமை, எங்கள் நாட்டில் களையெடுக்க வந்த கடவுளென்று கையெடுத்து கும்பிட்டு விடுதலை செய்கிறது லண்டன் "சிறப்பு" நீதிமன்றம் (பாவம் அவங்களே கன்பீஸ் ஆய்டாங்க  போல).  தன் மனைவி அனுஷ்கா நினைவாக விக்ரம் வாழ, விக்ரம் நினைவாக காதலி எமி ஜாக்சன் பின்தொடர, முடிகிறது ஒரு முரட்டு மொக்கை திரைப்படம். யப்பா போதுண்டா சாமி, இனிமே உங்க படத்துக்கு வந்தா என்ன நிக்க வச்சி கேள்வி கேளுங்கடா.

உண்மையாகவே படத்தில் நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு மட்டுமே மன நிறைவை தருகிறது. லண்டன் நகரின் அழகை மேலும்  மெருகேற்றி இருக்கிறார். அனுஷ்காவின் நடிப்பு சிறப்பு. வழக்கம் போல விக்ரமின் உழைப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது. அநேகமாக எமி ஜாக்சன் நடிக்கும் கடைசி படம் இதுவாகத்தான் இருக்கும். சந்தானம் தன் Call Sheetடை இப்படி வேஸ்ட் பண்ணுவது கடும் கண்டனத்திற்குரியது.

நன்றி,
பாமர தமிழன்    

Sunday, August 12, 2012

ஞாயிறு மாலை

இரண்டாவது மாடி மாடத்திலிருந்து பார்த்தேன், என் தெரு முழுவதும் என்னால் பார்க்க முடிந்தது. தினமும் பார்க்கும் தெருதான் என்றாலும் இன்று எங்கும் மனிதர்களை காண முடியவில்லை.  மனிதர்கள் மட்டுமல்ல தெருவில் துள்ளி விளையாடும் ஒரு சில நாய்கள் கூட இன்றில்லை. வீடுகளுக்குள் மனிதர்கள் பேசும் சத்தம் கூட கேட்கமுடியவில்லை, தொலைகாட்சிகளில் இருந்து வரும் ஓசை தான் கேட்கிறது. பொதுவாகவே எல்லா ஞாயிற்று கிழமைகளின் மாலைகளில் இப்படிதான் தெருக்கள் காணபடுகிறது. ஆங்காங்கே நிறுத்தி வைக்கபட்டுள்ள வாகனங்கள் ஓய்வின் உச்சதிலிருக்கின்றன, இனி ஐந்தாறு நாட்கள் ஓய்வின்றி உழைக்கவேண்டிய கட்டாயம் அவைகளின் உறக்கத்தில் புரிகிறது.  வார விடுமுறை முடிந்துவிட்டத்தின் சோகம் என் மனதில்மட்டுமல்ல, என் தெரு மனிதர்கள் மனதிலும் பாரமாய் இருப்பதை இந்த காட்சி உணர்த்துகிறது.

Monday, August 6, 2012

கவித கவித

வன்முறை:

என் கன்னத்தில் ஓங்கி அறைந்தான், நான் நிலை குலைந்தேன்!
என் மனைவியை எட்டி மிதித்துத் தள்ளினான், அவள் தடுமாறிக் கிடந்தாள்!
பின் பொருட்களை உடைத்து நொறுக்கினான், நான் வெகுண்டெழுந்தேன்...
என் மனைவி விபரீதம் அறிந்து என்னைத் தடுத்தாள்!
அவன் எங்களைப் பார்த்து சிரித்தான், பின் "அப்பா உக்காரு" என்றான் அவனுக்கு தெரிந்த தமிழில்.
நான் மூடிக்கொண்டு உக்காந்து விட்டேன், வேறு என்ன செய்வது?



க்ராதகன்:

விஜய் சிக்குலெட்டு சிட்டு குருவி பாடும் நேரம்,
ஆரியா ஆய்லே ஆய்லே பாடும் நேரம்,  
நரேன் மாம்பலம் விக்கிற கண்ணம்மாவை அழைக்கும் நேரம்,
அனுராக் காஷ்யாப் காஸ்டிங் பண்ண ஆள் தேடிகொண்டிருந்த நேரம்,
நான் Facebookல் உலாவிக்கொண்டிருந்தேன்,
இவை எதையுமே சட்டை செய்யாமல் faireverய் பிதுக்கி தரையில் பூசிகொண்டிருக்கிறான் ஒரு க்ராதகன்.....
 

Wednesday, March 21, 2012

விழித்திடு தமிழா, வெகுண்டெழு!





















தமிழக அரசியல் எவ்வளவு இழிவாக உள்ளது என்பதற்கு சட்ட சபையில் நேற்று நடந்த சம்பவமே சான்று. இலங்கைக்கு எதிரான ஐநா சபையின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று திமுகவும், ஆதிமுகாவும் வலியுறுத்துவது  போல வெளியில் காட்டி கொண்டுவிட்டு, உள்ளுக்குள் அவர்களின் அரசியல் பலத்தை நிரூபிக்க இரு கட்சிகளும் போட்டா போட்டி போட்டு தமிழக மானத்தை கப்பல் ஏற்றிய நிகழ்ச்சியே மீண்டும் சட்டசபையில் நடந்திருக்கிறது.

தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையும், இலங்கை மீனவர்களும் கொன்று அழித்ததற்கு எதிராக தமிழக கட்சிகள் ஒற்றுமையுடன் போராடி இருந்தால் பல உயிர்கள் காக்கபட்டிருக்கும். கேரளத்தை சேர்ந்த இரண்டு மீனவர்களை இத்தாலிய கப்பலில் இருந்த காவலர்கள் சுட்டு வீழ்தியதர்க்காக, அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் மண்டியிட வைத்து கடமையை எப்படி செய்யவேண்டுமென்று கேரள அரசு தமிழகத்திற்கு பாடம் கற்பித்திருக்கிறது. கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்திலும், திமுகவும், ஆதிமுகவும் அவர் அவர் நிலையாய் நிலையை தெளிவுபடுத்தாமல் ஒருவரின் நிலையை மற்றவர் அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தார்கள். காரணம், எதிர் கட்சியின் நிலைக்கு எதிராக கருத்து கூறி போரட்டங்களில் இறங்கி தங்கள் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக. கடைசியாய் இரு கட்சிகளும் ஒரே பக்கமாக, அதாவது மக்களை அழிக்கும் பக்கத்தில் சாய்ந்திருப்பது தமிழக மக்கள் மீது பரிதாபாத்தை ஏற்படுத்துகிறது.

இதே போல் காவிரி நீர், முல்லை பெரியாறு அணை போன்ற தமிழகத்திற்கு தேவையான அணைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும், இத்தனை ஆண்டுகாலம் ஓட்டு போட்டு ஆட்சி புரிய வாய்ப்பளித்த மக்களை மனதில் வைத்து, இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து போராடி இருந்தால் தமிழகம் முதன்மை மாநிலமாக மாறியிருக்கும். இலங்கை பிரச்சினையில் தமிழர்களை காங்கிரஸ் வஞ்சித்து விட்டது, முல்லை பெரியாறு பிரச்சினையில் கேரளா வஞ்சிக்கிறது, காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகம் நம்மை வஞ்சித்து விட்டது என்று புலம்பும் நம் மக்களை உண்மையில் வஞ்சித்துகொண்டிருப்பது யார்?  இந்த இரண்டு கட்சிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அணைத்து முன்னணி கட்சிகளும், உண்மையான உணர்விருந்தால் தங்கள் கட்சி கொள்கை, சொந்த விரோதம், குடும்ப சண்டை, சாதி மத அரசியல் போன்றவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்று கூடி போராடியிருந்தால் நம் மீனவர்கள் இத்தனை பேரை இழந்திருப்போமா? நம் அடிப்படை உரிமைகளை இழந்திருப்போமா? ஈழத்தில் இத்தனை தமிழர்களை பலி கொடுத்திருப்போமா? அனால் அப்படி ஒரு நிலை தமிழகத்தில் என்றும் வரப்போவது இல்லை.

இனியும் நம் அரசியல்வாதிகளை நம்பி, நாம் இப்படியே தூங்கிகொண்டிருந்தோமேயானால், நம்மை யார்தான் காப்பது? அரசியல், சாதி, மதம் அல்லாத அடையாளம் நமக்கிருக்கிறது, அது தான் தமிழன் என்ற அடையாளம். இனியேனும் நாம் விழித்து, வெகுண்டெழுந்து அரசியல் கட்சிகளை புறக்கணித்து, மக்களை ஒன்றுபடுத்தி, தமிழ் மக்கள் இயக்கமாக செயல்பட்டு ஒன்றுகூடி போராடினாலே ஒழிய நம் அடிப்படை உரிமைகளைகூட நாம் பெற முடியாது.

வெகுண்டேழுவோமா?

Friday, February 10, 2012

ஓட ஓட ஓட தூரம் கொறையல!


Life is a race, Run till you win என்பதே இன்றைய சமூக கொள்கையாகி இருக்கிறது. ஓடுகிறோம் ஓடுகிறோம் வெற்றியை தேடி ஓடிகொண்டே இருக்கிறோம். சிலர் இலக்கை நோக்கி ஓடுகிறோம், சிலர் இலக்கே இல்லாமல் ஓடுகிறோம். சிலர் இலக்கை அடைந்த பின், வேறு ஒரு இலக்கு உருவாக்கி அதை நோக்கி ஓடுகிறோம்.  ஓடும் வேகத்தில் வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிந்துக் கொள்ளாமல், தவறான பாதையில் ஓடி கொண்டே இருக்கிறோம். அதனால்ஓட ஓட தூரம் மட்டும் குறைவதில்லை. காரணம் ஆசைக்கு அளவில்லை. மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து நம்மை எடைபோடுகிறோம். அலுவலக நண்பர்கள் மகிழுந்து வைத்திருக்கிறார்கள் , சொந்த வீடு வைத்திருக்கிறார்கள் என்று ஒப்பிட்டு நாமும் வாங்குகிறோம். காலம் முழுவது கடன் கட்டுகிறோம், நம் சுமையை கூட்டிக்கொள்கிறோம். பின் சுமையை தாங்குவதற்காக நமக்கு பிடிக்காத வேலையாய் இருந்தாலும் அதை உதறிவர முடியாமல், இரவு பகல் பாராமல் அடிமையாய் வேலை செய்ய நேர்கிறது. கணவன் மனைவி இருவரும் உழைத்து கடன் கட்டி, மிஞ்சியதை சேமித்து அதை பிள்ளைகள் கல்விக்காக செலவு செய்கிறோம்.  பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுப்பதற்காக, சிறந்த பள்ளிகளில் பல லட்சம் செலவில் சேர்க்கிறோம். பிள்ளைகளை மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு அவர்கள் சுமையையும் கூட்டுகிறோம். பிள்ளை பருவத்தை மறந்து அவர்களையும் இந்த பந்தயத்தில் இறக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறோம். கல்வி, கலை, விளையாட்டு என்று எல்லாவற்றிலும் நம் பிள்ளைகள் வெற்றியடைய வேண்டும், முதலாவதாக வர வேண்டுமென்று எண்ணுகிறோம்.  அப்படி அவர்கள் வெற்றியடையவில்லை என்றால் அவர்களை மனதளவில் துன்புறுத்துகிறோம். தோல்வியை தாங்கும் பக்குவத்தை அவர்களுக்கு ஏற்படுத்த தவறுகிறோம். வெற்றி ஒன்றே வாழ்கை என்று தவறாக கற்பிக்கிறோம். அவர்களையும் தவறான பாதையில் அழைத்து செல்கிறோம்.

இதன் விளைவாக, கடன் தொல்லையால் தற்கொலை. வேலை போனதால் தற்கொலை, வேலை பழுவால் தற்கொலை, உறவுகள் முறிவால் தற்கொலை இதைவிட தேர்வில் தோல்வியால் அல்லது குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததனால் என்று பள்ளிக்குழந்தைகள் தற்கொலைகள் என தோல்விகளால் துவண்டு விழும் சிறகுகளாய் ஒரு சமுதாயத்தை உருவாக்கிவிட்டோம். நாம் இந்த ஓட்டத்தினால் அடைந்த பயன் தான் என்ன என்று சிந்தித்தால், சொந்த வீடு, மகிழுந்து, வங்கியில் போதுமான பணம், பிள்ளைகள் நல்ல பள்ளிகளில் படிப்பு என்று வெற்றிப்பாதையில் பயணம் செய்யும் மகிழ்ச்சி கொடுத்தாலும், உண்மையில் இந்த வாழ்கை முறையை உற்று கவனித்தால் நாம் அடைந்திருப்பது வெற்றியல்ல, வெற்றியென்று நமக்கு நாமே ஆழ் மனதில் ஏற்படுத்திகொண்ட மாயை என்று தெரியும். இரவு பகல் பாராமல், கணவனும் மனைவியும் உழைத்து, பிள்ளைகளுடன் நேரம் செலவிடாமல், week endல் மட்டும் Mc Donald'sல் chicken burger வாங்கி கொடுத்தால் பிள்ளைகளுக்கு பாசமும் நேசமும் வந்துவிடுமா? சொந்த அண்ணன், தம்பி, தங்கை என்று எல்லாரையும் நம் ஓட்டத்திற்கு தடையாக நினைத்து, தூரத்தில் வைத்து விட்டோம். ஆனால் நம் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பாசத்துடனும் நேசத்துடனும் வளர்வார்கள் என்று நம்புகிறோம். நம் பெற்றோர்களை நம் அருகே வைத்து பேணிக் காக்க மறுக்கிறோம். ஆனால் நம் பிள்ளைகள் நம்மை மதிக்க வேண்டுமென்று நினைக்கிறோம். இந்த ஓட்டத்தின் முடிவில் என்ன நடக்கிறது? நாம் வாழ்க்கை முழுவதும் உழைத்து, பல இன்பங்களை இழந்து, பல துன்பங்களையும், அவமானங்களையும் தாங்கி, பல கனவுகண்டு, வளர்த்த பிள்ளைகள், வளர்ந்த பின் நாம் சேர்த்து வைத்த சொத்துக்காக அவர்கள்சண்டையிட்டு கொள்வதை நம் கண்முன்னே கண்டு வருந்தி சுருங்குகிறோம். ஆனால், அவர்களுக்கு நாம் தான் அப்படி ஒரு தவறான வாழ்கை முறையை கற்பிதிருக்கின்றோம் என்பதை உணர்வதில்லை

இந்த ஓட்டத்தினால், இந்த உலகத்தில் இருக்கும் பல அற்புதங்களை நாம் ரசிப்பதில்லை, நம் பிள்ளைகளையும் ரசிக்க விடுவதில்லை. தோல்வியென்பது நம் வாழ்கையின் அங்கம் என்பதையும், நம் பிள்ளைகளின் தோல்வி அவர்களின் வாழ்க்கை கல்வி என்றும் நாம் புரிந்துகொள்வதில்லை. வாழ்கை பயணத்தில், பாதையில்  இருக்கும் முற்களை ஒதுக்கி மலர்ச்சோலையை சென்றடைவதற்கு பதில், கையில் கத்தியை கொடுத்து வனத்தில் போய் சண்டையிட அனுப்புகிறோம். அவர்கள் முள் எது, மலர் எது, விலங்குகள் எது, என்று தெரியாமல் தவறான அணுகுமுறையால் அரைகுறை வாழ்கை வாழ்கிறார்கள். தாம் வாழ்ந்ததற்கான சுவடுகளே இல்லாத அளவிற்கு ஒரு வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம்.


இப்படிதான் வாழ வேண்டுமென்று விதிகளேதும் இல்லை. எப்படி வாழவேண்டுமென்பது நம் கையில்தான் இருக்கிறது. இனி நம் பிள்ளைகளையாவது நல்ல முறையில் வாழ வழி விடுவோமா?, நல்ல வாழ்க்கை முறையை கற்பிப்போமா?


நன்றி
பாமரத் தமிழன்

Sunday, February 5, 2012

மெக்கானிக் ஷாப் கவுண்டரும், கடலை உருண்டை செந்திலும்!




கவுண்டர்: (கீத்து கொட்டகை மெக்கானிக் ஷாப்பில் கையில் 4x2 ஸ்பானர் வைத்து கொண்டு ஒரு ஓட்டை மோட்டரை ரிப்பேர் செய்வதுபோல் பாவலா பண்ணிக்கொண்டு) ஹே நின்னுகோரி வர்ணம், ஹே ஹே உக்காந்துகோடி வர்ணம், ஹே படுத்துகோடி வர்ணம்.

செந்தில்: (கையில் கடலை உருண்டையை வைத்து கரண்டி கொண்டு வருகிறார்): ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்லே!!!

கவுண்டர்: யார்டா அவன் என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறவன்.

செந்தில்: அது நான் தான்னே!

கவுண்டர்: நீ ராசாவா? அடுப்புல வெச்சி கருக்குன மாறி ஒரு கையி... அத நீ வெக்க வேற செய்வியா?. படுவா பிச்சுபுடுவேன்.

செந்தில்: சும்மா வேலாடதீங்கன்னேன். இன்னக்கி எப்பன்னே நல்ல நேரம்?

கவுண்டர்: நீ வந்துடீல நாயே, இனிமே கெட்டநேரம் தான் நல்லநேரமே கெடயாது. அமா அப்புடி என்ன நல்ல காரியம் பண்ண போறே நாயே நீ?

செந்தில்: அண்ணி காலைல கோழி வாங்குறத பாத்தேன், அதான் நல்ல நேரத்துல சாப்ட போகலாம்னு....

கவுண்டர்: டேய் சிவகுமார் தலையா, நானே காலைல இருந்து இந்த மோட்டார் எப்புடி ரிப்பேர் பண்றதுன்னு தெரியாம ஒரே kanfuse ஆகிபோய் இருக்கேன், என்ன டென்ஷன் பண்ணாதே ஓடி போயிரு.

செந்தில்: லெஸ் டென்ஷன் மோர் வொர்க், மோர் டென்ஷன் லெஸ் வொர்க். be கூல்

கவுண்டர்: இன்னொரு தடவ இங்கிலீஷ் பேசுனே... மவனே மோட்டர on பண்ணி, உன் தலைய உள்ள விட்டுருவேன் படுவா. மூஞ்சிய பாரு ஏழாம் அறிவு சூர்யா மாதிரி, பரதேசி நாயி.

செந்தில்: ஹா ஹா ஹா ஹா

கவுண்டர்: இப்ப எதுக்கு நாயே பம்பரத்த தின்ன பண்ணி மாறி சிரிக்கிறே?

செந்தில்: உலகத்த நெனச்சேன் சிரிச்சேன்!

கவுண்டர்: அப்புடி என்ன நடந்திருச்சி இந்த உலகத்துல?


செந்தில்: ஸ்பானர் எடுத்தவன்லாம் மெக்கானிக்ங்கறானுங்க!

கவுண்டர்: காலைல எந்திரிச்சதுலருந்து, நைட் தூங்குரவரைக்கும், ஓசில எங்க வாங்கி திங்கலாம்னு அலையிற நாயி நீ.... உனக்கு, நக்கல், நய்யாண்டி,  இதுல கருத்து வேற பேசுர.   இனிமே கருத்து பேசுவே..பேசுவே... கம்முனாட்டி.....(என்று ரெண்டு மிதி மிதித்து) ஆமா.... அது என்ன நாயே கையிலே?

செந்தில்: பாத்தா தெரியல, கடலை உருண்ட (என்று அழுது கொண்டே சொல்ல)

கவுண்டர்: ஓஹ இதான் கடலை உரோண்டயா, நான் பாத்ததே இல்லே. எங்க குடு பாப்போம்.

செந்தில்: குடுக்க மாட்டேனே! குடுத்தா நீங்க தூக்கி போட்டுருவீங்களே

கவுண்டர்: குடுக்கலனாலும் நான் புடுகி தூக்கி போடுவேனே......  அப்பறம் உன் வாயிலேயே மிதிப்பேனே......

செந்தில்: அண்ணேன் என்னைய upset பண்ணுனீங்க, அப்பறம் 3வது தெரு ராசாத்தி அக்கா சொல்லச்சொன்னத உங்க கிட்ட சொல்ல மாட்டேன்.

கவுண்டர்: (ஷ்ஹூ என்ன... பண்ணி black மெயில் பண்ணுது. சரி சமாளிப்போம்). டேய் ராசா உன்ன போய் நான் அடிப்பேனாடா. நீ வருவேன்னு உனக்காக, வேர்கடலையும் தேங்கா பார்பியும் வாங்கி வெச்சிருக்கேன், வா ராசா வா! ஆமா அந்த 3வது தெரு ராசாத்தி என்ன சொன்னா?

செந்தில்: நீங்க ரொம்ப புத்திசாலின்னேன்.

கவுண்டர்: உனக்கு தெரியிது இந்த உலகத்துக்கு தெரிய மாட்டேங்குதே. இதெல்லாம் நீ ஊருக்குள்ள போய் சொல்லணும் டா . அண்ணேன் ஒரு நல்லவர், வல்லவர் bend எடுக்கரதல... ஒரு சிறந்தவர் ன்னு... முக்கியமா அந்த 3வது தெரு ராசாத்தி அக்கா கிட்ட போய் சொல்லணும். ஆமா அவ என்ன சொன்னா?

செந்தில்: அந்த வேர் கடலை....

கவுண்டர்: எது?

செந்தில்: அந்த தேங்கா பர்பி

கவுண்டர்: டேய்.... என்ன டென்ஷன் பண்ணாதே... சொல்லிரு

செந்தில்: இந்தா அண்ணி வந்துட்டாங்க அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க ( என்று சொல்லிவிட்டு ஓட்டம் எடுக்க)

பின்னால் இருந்து கேட்டுக்கொண்டிருந்த கவுண்டரின் மனைவி கையில் உலக்கையுடன் வந்து, கீத்து கொட்டகை கிழிய கிழிய கவுண்டரை துவைத்து எடுக்கிறார்.....

Tuesday, January 31, 2012

அணு உலைகள் - ரஸ்கா ரிஸ்கா?


 
 அணு உலைகள் பாதுகாப்பானது அல்ல என்றும், நம் நாட்டில் அணு உலைகளின் கழிவுகள் கண்டிப்பாக முறையாக அப்புறபடுத்த போவதில்லை என்றும், இதனால் ஏற்படப்போகும் சுற்றுப்புற கேடுகளையும், சுகாதார சீர்கேடுகளையும் இந்திய மக்களாகிய நாம் தான் அனுபவித்தாக வேண்டியது இருக்கும் என்றும் நாம் அனைவரும் அறிவோம். அது மட்டுமின்றி அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் சாமான்யர்களாகிய நம் கற்பனையை விட மிக கொடியது என்பதை நாம் உணரவேண்டும். போபால் போன்ற சாதாரண ரசாயன விபத்தையே தடுக்க முடியாத நம் நாடு, விபத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு சேர வேண்டிய உதவியை கூட செய்ய தவறிய நம் நாட்டு அரசாங்கம், அணு உலைகளை நிறுவி, எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செவ்வனே செய்து, அதை பாதுகாப்பாக இயக்கி மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் என்பதில் எனக்கு கடுகளவும் நம்பிக்கை இல்லை. அப்படி இருக்கையில் இந்த அணு உலைகளால் நமக்கு என்னதான் நன்மைகள் வந்துவிடபோகிறது? எதற்காக இந்த ரிஸ்கை நாம் ரஸ்க்கு சாப்பிடுவது போல் எடுக்க வேண்டும்? 

அணு உலைகள் பற்றி மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையே நிலவுகிறது. என்னுடைய குழப்ப நிலையை போக்கியது எழுத்தாளர், அரசியல் விமர்சகர் திரு ஞானி அவர்களின் "ஏன் இந்த உலை வெறி?" என்ற புத்தகம்.  அனைவரும் "ஏன் இந்த உலை வெறி?" என்ற புத்தகத்தை வாங்கி படித்து தெளிவுற வேண்டுமென்பதே எனது எண்ணம். வாங்கி படிக்க பணமோ, நேரமோ, வாய்ப்போ இல்லாதவர்களுக்காக திரு ஞானி அவர்களே அவரது சொந்த இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கும் இந்த புத்தகத்தை படித்து கொள்ளலாம்.

நான் படித்ததில் இருந்து சிலவற்றை தொகுத்து கொடுத்துள்ளேன்

இதுவரை நடந்த அணு விபத்துகள்
1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில் நடந்திருக்கின்றன என்று நம்ப தகுந்த புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. அதனால் ஏற்பட்ட உயிர், உடமை, வாழ்க்கை சேத நஷ்டங்களின் மதிப்பு மட்டும் வருடத்துக்கு சுமார் 332 மில்லியன் டாலர்கள். செர்னோபில் விபத்தில்  மட்டும் 2000 பேர் இறந்ததாக அப்போது சோவியத்அதிபராக இருந்த கோர்பசேவே சொல்லியிருக்கிறார்.1986லிருந்து 2004 வரை செர்னோபில் விபத்துக் கதிர்வீச்சால் நோயுற்று செத்தவர்கள் மொத்தம் ஒன்பது லட்சத்து 85 ஆயிரம் பேர். இன்னும் 20 ஆயிரம் வருடங்களுக்கு கதிர் வீச்சு நீடிக்கும் என்பதால் தொடர்ந்து வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் மெல்ல மெல்ல புற்று நோய் போன்றவற்றால் இறந்துகொண்டிருப்பார்கள்.உலையை சுற்றி ஒரு லட்சம் சதுர மைல் பரப்புக்கு அதாவது சுமாராக முழுத் தமிழ்நாடு அளவுக்கு கதிரியக்கம் கடுமையாக பதித்திருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கும். செர்னோபில்லின் கதிர்வீச்சுக்குள்ளானவை ஐரோப்பாவில் 40 சதவிகித இடம், ஆசியாவில் எட்டு சதவிகிதப் பரப்பு. இங்கெல்லாம் மொத்தமாக 40 கோடி மக்கள் கதிரியக்கத்துக்கு உள்ளானார்கள். உலையை சுற்றி வெறும் 30 கிலோமீட்டர் பகுதியில்

இருந்த நான்கு லட்சம் பேரை உடனே வெளியேற்ற வேண்டியதாயிற்று. இன்னும் 5 கோடி பேர் ஒரு கோடி குழந்தைகள் உட்பட கதிரியக்க ஆபத்தான பகுதியில் இருக்கிறார்கள்.

கூடங்குளம் அணு உலையை ஆரம்பத்திலேயே எதிர்க்காமல் இப்போது எதிர்ப்பது ஏன் ?
கூடங்குளம் அணு உலை திட்டம் ஆரம்பத்தில் மட்டுமல்ல, அணு மின்சார எதிர்ப்புகள், அதற்க்கு முன் பல ஆண்டுகளாகவே  இருந்து வந்தன. இப்போது தான் அது உச்சகட்ட நிலையை அடைந்திருப்பதால்,  வெளி உலகிற்கு அதாவது நம்மை போன்ற பாமர மக்களுக்கும் தெரிய வந்திருக்கிறது.

இந்தியாவில் மின்சாரத்துக்கு வேறு வழியே இல்லை. அணு மின்சாரத்தைத்தான் நம்பியாகவேண்டும் என்கிறார்களே ?
அது ஒரு கடைந்தெடுத்த பொய். அணு மின்சாரம் பற்றி சொல்லப்படும் நான்கு பிரதானப் பொய்களில் இதுவும் ஒன்று. 1. அணு மின்சாரம் தூய்மையானது.                               2. பாதுகாப்பானது. 3.விலை மலிவானது. 4. இதை விட்டால் இனி வேறு வழியில்லை. முதல் இரண்டும் எப்படிப்பட்ட மோசடிகள் என்பதை மேலே பார்த்துவிட்டோம். இனி அடுத்த இரண்டைப் பார்ப்போம். விலை மலிவானது என்பது அணுசக்தி துறையின் அடுக்கடுக்கான பொய்களில் இன்னொன்று. அவ்வளவுதான். எந்த அடிப்படையில் விலையைக் கணக்கிடுகிறார்கள் என்பதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். ஒரு அணு உலையைக் கட்ட 10 முதல் 15 வருடமாகிறது.ஒவ்வொரு அணு உலையும் கட்ட ஆரம்பிக்கும்போது சொல்லும் மதிப்பீடு வேறு. பத்து வருடம் கழித்துக் கட்டி முடிக்கும்போது செலவு பல மடங்கு அதிகம். அப்படித்தான் கூடங்குளம் உலைக்கும் ஆரம்பத்தில் 6000 கோடி என்றார்கள். கடைசியில் இது 13 ஆயிரம் கோடியாகிவிட்டது. அது அதிகபட்சம் 30 வருடம் இயங்கலாம்.பின்னர் மூடுவிழா, சமாதி கட்ட இன்னொரு பத்து வருடம் ஆகும். இந்த ஐம்பது வருடங்களில் ஆகும் செலவின் அடிப்படையில்
முப்பது வருடங்களில் தயாரித்த மின்சாரத்துக்கு விலை நிர்ணயித்தால் அந்த விலை எவ்வளவு என்று சொல்லவேண்டும். பிறகு அணு உலையையும் கழிவுகளையும் லட்சக்கணக்கான வருடங்களுக்கு பாதுகாக்கும் செலவுக்கு எங்கிருந்து பணம் வரும்?
வெறுமே உலை இயங்கும்போது ஆகும் செலவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மின்சாரத் தயாரிப்பு செலவைக் கணக்கிட்டால் கூட இதில் எல்லா செலவுகளையும் கணக்கிட்டு சொல்வதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு அணு உலைக்கு தினசரி பத்து லட்சம் லிட்டர் நல்ல தண்ணீர் தேவைப்படுகிறது. லிட்டருக்கு
எவ்வளவு காசு அடிப்படையில் இந்த செலவு கணக்கிடப்படும் ?
அணு உலைகளில் பயன்படுத்தும் கன நீர் விலை எவ்வளவு ? ஆனால் அரசு கொடுக்கும் மான்யம் எவ்வளவு ? கைகா அணு உலைகளில் பயன்படுத்தும் கன நீர் செலவுக் கணக்கை மதிப்பிட்டபோது ஒரு உலைக்கு கன நீருக்காக மட்டும் அரசு தரும் மான்யம் 1450 கோடி ரூபாய் என்பது தெரியவந்தது. இது உலையை
நிறுவிய முதலீட்டுச் செலவில் 17 சதவிகிதம் !
இது தவிர அணு உலைகளில் நடக்கும் விபத்துகளினால் ஆகும் இழப்பு, செலவு இவற்றையெல்லாம் கணக்கிடவேண்டும். புகோஷிமா விபத்துக்குப் பிறகு ஜப்பான் அணுமின்சார தயாரிப்புச் செலவில் விபத்துகளினால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பை சந்திக்க ஆகும் செலவுகளையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும் என்று முடிவு
செய்திருக்கிறது. அப்படிச் செய்தால் விலை அதிகமானது என்று சொல்லப்படும் சூரிய சக்தி மின்சாரத்தை விட அணுமின்சாரத்தின் விலை அதிகமாகிவிடும்.
கல்பாக்கம் அணு உலைகள் 1987ல் இரண்டு வருடங்கள் சிக்கல்களினால் மூடிக் கிடந்த சமயத்தில் ஏற்பட்ட இழப்பு 30 கோடி டாலர்கள். இங்கே 2002ல் சோடியம் கசிவு ஏற்பட்ட விபத்தில் இழப்பு மூன்று கோடி டாலர்கள். . தாரப்பூர் அணு மின் நிலையங்கள்தான் உலகிலேயே மிக அதிகமான கதிர் வீச்சு சிக்கல்களுக்குள்ளானவை.
இங்கே 1989ல் ஐயோடின் கசிவு எற்பட்ட விபத்தில் இழப்பு சுமார் ௮ கோடி டாலர். ராஜஸ்தான் கோட்டா அணு உலையில் 1995ல் ஹீலியம் கசிவு ஏற்பட்டு 2 வருடம் பாதிப்பினால் ஏற்பட்ட இழப்பு 28 கோடி டாலர்.

ஆனால் இனி இதை விட்டால் வேறு வழி கிடையாது என்கிறார்களே ?
அணுசக்தி துறையின் பூச்சாண்டி அது. அதை நம்பி வேறு வழிகளை நாம் மேற்கொள்ளாமல், அணுமின்சாரத்தை நம்பினால், நாம்தான் முட்டாள்களாகிவிடுவோம். அணுமின்சாரம் இதுவரை எவ்வளவுகிடைத்திருக்கிறது என்ற கணக்கை இத்தனை மெகாவாட், இத்தனை யூனிட்டுகள் என்று சொல்லி பிரும்மாண்டமாகக் காட்டி ஏமாற்றுகிறார்கள். அத்தனையும் இந்தியாவின் மொத்த மின்சாரத் தயாரிப்பில் வெறும் 2.3 சதவிகிதம்தான். இதற்குத்தான் கோடிக்கணக்கான ரூபாய்களை ஐம்பது வருடங்களாக வீணடித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த 20 வருடங்கள் இன்னும் பல்லாயிரம் கோடிகளைக் கொட்டினாலும் அணு மின்சாரத்திலிருந்து பத்து சதவிகிதத்தைக் கூட நாம் அடையும் வாய்ப்பு இல்லை.

சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கச் செலவு அதிகம் என்று அணு விஞ்ஞானிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் பிரசாரம் செய்கிறார்களே ?
எதை விட இது செலவு அதிகம் ? அணுமின்சாரத்தின் அசல் விலையை அவர்கள் மூடி மறைத்துவிட்டு மற்றவற்றை விலை அதிகம் என்று பொய் பிரசாரம்தான் செய்கிறார்கள். ஜெய்தாபூரில் பிரெஞ்ச் கம்பெனியிடமிருந்து அணு உலை வாங்கி நிறுவுவதற்கு அவர்கள் போட்டிருக்கும் மதிப்பீடு ஒரு மெகாவாட்டுக்கு 21 கோடி ரூபாய். ஆனால் ஏழு இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க தனியாருக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. அங்கே நிறுவும் செலவு ஒரு மெகாவாட்டுக்கு 12 கோடி ரூபாய்தான். நிறுவியபின்னர் பராமரிப்பு செலவும் அணு உலையை விடக் குறைவு. ஆபத்து துளியும் இல்லை. அணு உலையை லட்சக்கணக்கான வருடத்துக்குப் பாதுகாத்தே திவாலாகிவிடுவோம்.
இப்போது சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களின் விலை படு வேகமாக சரிந்து வருகிறது. சோலார் போட்டோவோல்டேய்க் செல் தயாரிக்கத் தேவைப்படும் பாலி-சிலிக்கான் விலை கடந்த மூன்று வருடங்களில் 93 சதவிகிதம் குறைந்துவிட்டது. அதனால் இந்த மின்சாரம் தயாரிக்க முன்வரும் தனியார் கம்பெனிகள் அரசுக்கு மின்சாரத்தை முன்பை விடக் குறைந்த விலையில் தர முன்வந்துவிட்டன. டிசம்பர் 2011ல் நடந்த ஏலத்தில் இந்திய அரசு ஒரு மெகாவாட்/மணி அளவு மின்சாரத்தை 15,390 ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று அறிவித்திருந்தது. ஆனால் பிரான்சின் இரண்டாவது பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனமான சோலேர் டைரக்ட் 7490 ரூபாய்க்கே விற்பதாக ஏலம் எடுத்திருக்கிறது. இது ஒரு வருடம் முன்பு இருந்த விலையை விட 34 சதவிகிதம் குறைவு. எனவே 2015க்குள் சூரிய மின்சாரத்தின் விலையும் இப்போது நிலக்கரியால் தயாரிக்கும் அனல் மின்சாரத்தின் விலையும் சமமாகிவிடும் என்று கருதுகிறார்கள்.

ஆனால் இன்னமும் உலகம் முழுவதும் புது அணு உலைகள் தொடங்கப்படுவதாக அணு உலை ஆதரவாளர்கள் சொல்கிறார்களே?
அதுவும் பொய்தான். ஒவ்வொரு தகவலாகப் பார்க்கலாம். 1. நான்கு வருடங்களாக் உலக அளவில் அணு மின்சாரத் தயாரிப்பு அளவு தேக்கமடைந்தது மட்டுமல்ல, குறைந்தும் வருகிறது. 2006ல் 15.2 சதவிகிதமாக இருந்தது 2010ல் 13.5 ஆகிவிட்டது. 2. அதே போல உலக அளவில் இருக்கும் அணுமின்சாரத் தயாரிப்புக்கான நிறுவப்பட்ட திறன் அளவும் குறைந்துவிட்டது. 2006ல் இது 8.7 சதவிகிதம். 2010ல் 7.4தான். 3.வருகிற 2030க்குள் மொத்தம் 143 உலைகள் வயதாகிவிட்டதால் மூடியாக வேண்டிய நிலையில் நிரந்தர சமாதி வைக்கப்படவேண்டியவை. எனவே 2030ல் உலக நிலையைப் பார்த்தால் இப்போதுள்ளதை விட 30 சதவிகிதம் அணு உலைகள் குறைவாகவே இருக்கும். ஜெர்மனி 2020க்குள் தன் அணு உலைகள் அனிஅத்தையும் மூடப் போகிறது. ஆஸ்திரியா, ஸ்பெயின், ஸ்வீடன், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளும் தங்கள் அணு உலைகளைக் குறைக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன. 4. இப்போது மொத்தமாக 64 உலைகள் கட்டப்பட்டு வருவதாக உலக அணுசக்தி முகமை தெரிவித்தது. இதில் 12 உலைகள் 20 வருடங்களாகக் கட்டப்பட்டு வருபவை. மொத்தம் 64ல் 43 உலைகள் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய மூன்றே நாடுகளில் கட்டப்படுபவை. மேலை நாடுகளில் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

இன்னும் ஆழமாக பல செய்திகளை தந்துள்ளார் திரு ஞானி அவர்கள். தயவு செய்து கீழே உள்ள linkய் click  செய்யவும்

நன்றி
பாமர தமிழன்

Tuesday, January 24, 2012

விஜய் இனி நன்பேண்டா!


விஜய் வாழ்கையில் செய்த மிகப்பெரிய சாதனை, 3 Idiotsன் remakeஆன நண்பன் படத்தில் நடித்ததே. இதுவரை விஜய் நடித்ததில் இதுவே சிறந்த படம். இது போன்ற characterல் விஜயை பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  என்னடா ஒரே விஜய் புராணம் பாடுரான், இதுல எதோ உள் குத்து இருக்கோன்னு யோசிக்கிறீங்களா?  அப்டியெல்லாம் எதுவும் இல்ல, நல்ல படம் யார் நடிச்சாலும் அதை வாழ்த்துறது தானே தமிழ் பண்பாடு. சரி படத்துக்கு வருவோம். Original Scriptன் சிறப்பும், தன்மையும் மாறாமல் அப்படியே கன கச்சிதமாக எடுத்திருப்பதில் ஷங்கரின் அனுபவம் வெளிப்படுகிறது. இருந்தாலும், ஜெயம் ராஜா செய்யும் வேலையை ஏன் ஷங்கர் செய்தார் என்பது தான் தெரியவில்லை.  

பாடல் காட்சிகளில் ஷங்கரின் touch தெரிகிறது. ஸ்ரீகாந்த், ஜீவா இருவரும் அருமையான தேர்வு. தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சத்யராஜ், அனுபவம் பேசுகிறது. கிடைத்த Gapல் கெடா வெட்டி போங்கல் வைத்துள்ளார்  சத்யன். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிபதிவும், ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசையும் சிறப்பு. பாடல்கள் நன்று. இலியானவிர்க்கு வாய்ப்பு கம்மி. மொத்தத்தில்,  இது போன்ற சிறந்த படங்களையே தேர்வு செய்து நடித்தால், இதுவரை விஜயை பிடிக்காதவர்களுக்கும் இனி விஜய் நன்பேண்டா தான்.

கவுண்டர் Touch :
கவுண்டர் : I am very Happy! படம் ரொம்ப நல்லாருக்கு. 
சூர்யா: Actually, இந்த படம் நான் நடிக்க வேண்டியது, ஜோ கூட டைம் ஸ்பென்ட் பண்றதுக்காக இந்த படத்தை விட்டு குடுத்துட்டேன்.
கவுண்டர்: வாடா ஓட்ட வாய் நாராயணா. நான் அப்பவே நெனச்சேன், Silencer குசும்பன் characterla நீ  நடிச்சிருந்தா naturalaa இருந்திருக்குமேன்னு,  சத்யன் உன்னவிட நல்லா நடிச்சி பேர் வாங்கிட்டான். இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா
சூர்யா: No No! Actually Vijay Characterக்கு ஷங்கர் என்னதான் first approach பன்னார்.
கவுண்டர்: சரி நாயே, கல்கண்டு தட்டெல்லாம்  இருக்குது எச்சி ஊத்தாத, டூ ஸ்டேப் தள்ளி நில்லு. அப்புடியே ஆத்தோரமா போனீனா உங்கப்பன் நண்டு வறுத்து தின்னுகிட்டே கம்பராமாயணம் கதை சொல்லுவான், அதையே ரீமேக் பன்னி ஹரி direction நடிச்சிரு.
சூர்யா: Actually  ஜோ .....
கவுண்டர்: படுவா ஜோ ஜோன்னே SJ சூர்யா கிட்ட புடிச்சி குடுதிருவேன். Half டவுசர, Full Phanta போட்டுக்கிட்டு நாய்க்கு லவுச பாரு.

Tuesday, January 3, 2012

2011ல் என்னை கவர்ந்த திரைப்படங்கள்

2011ல் வெளிவந்து, இதுவரை நான் பார்த்ததில் என்னை கவர்ந்த  படங்கள் இவை. இதே வருடம் வெளிவந்து நான் பார்க்காத படங்களில் நல்ல படங்கள் இருக்கலாம். பட்டியலில் நான் குறிப்பிடாத வேறு நல்லபடங்கள் ஏதேனும் இருந்தால் எனக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.என்னை கவர்ந்தால் கண்டிப்பாக இந்த பதிப்பை புதுப்பிப்பேன்.

ஆரண்ய காண்டம்
அற்புதமான திரைக்கதை, அருமையான இயக்கம், சுருக்கமான வசனங்கள், சிறப்பான ஒளிப்பதிவு, மிக நேர்த்தியான நடிப்பு, படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசை என்று 2011ல் என்னை முழுவதும் கவர்ந்த மிக குறைந்த படங்களில் ஆரண்யகாண்டம் மிக முக்கியமான திரைப்படம். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜனுக்கு ஒரு தனியிடம் தமிழ் சினிமாவில் காத்திருக்கிறது.

குறைகள்: It's an "adults movie". தமிழில் சொன்னால், குடும்பத்துடன் பார்க்க இயலாது. தனித்தனியாக சென்று பார்க்கலாம்.

வாகைசூட வா

அறுபதுகளில் நடக்கும் கதை, மிகச்சிறந்த திரைக்கதை, சிறப்பான வசனங்கள், நேர்த்தியான கலை, மற்றும் ஒளிப்பதிவு, நல்ல இயக்கம் என வரலாற்றில் இடம்பெறக்கூடிய படைப்பு, வாகை சூட வா.  இனியாவின் பாத்திரப்படைப்பு அருமை. இயக்குனர் சற்குணம் முதன்மை நிலை இயக்குனர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார்.

குறைகள்: குறைகளென்று ஒன்றும் இல்லை.



மயக்கம் என்ன
செல்வராகவன் இயக்கத்தில் முதிர்ச்சி தெரிகிறது. என்னை முழுமையாக கவர்ந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. ரிச்சா இரண்டாம்பாதியில், அருமையாக பொருந்துகிறார். அணைத்து துறைகளிலும் தேர்ந்த ஒரு நல்ல திரைப்படம்.

குறைகள்: இதுவும் வயதுவந்தோர் மட்டும் பார்க்ககூடிய திரைப்படம். வேறேதும் குறைகள் எனக்கு தெரியவில்லை.

 
ஆடுகளம்
சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. வெற்றிமாறன் இயக்கத்தில் மிகவும் நேர்த்தியாக அமைந்த படம். பாடல்கள், ஒளிபதிவு, இயக்கம், நடிப்பு, பின்னணி இசை என்று அனைத்தும் சிறப்பாக இருந்தாலும், கடைசியாக நம் மனதில் நிற்பவர் வில்லன் நடிகருக்கு  மிக நேர்த்தியாக குரள் கொடுத்த திரு ராதா ரவி அவர்களே.

குறைகள்: படத்தின் முதல் பாதியில் இருந்த வேகம், இரண்டாம் பாதியில் இல்லை. கொஞ்சம் சுருக்கமாக முடித்திருக்கலாம்.          

ஆண்மை தவறேல்
இதுவரை சொன்ன அணைத்து படங்களும், நல்ல படங்களாக இருக்கும் என்று தெரிந்து பார்த்த படங்கள். அனால், ஆண்மை தவறேல் எதேட்சையாக பார்த்த படம். ஆங்கில படத்தின் தழுவல் என்றாலும், மிக சிறப்பாக படமாக்கபட்டிருக்கிறது. தமிழில் நான் பார்த்த ஆங்கில தழுவல் படங்களில், சிறந்த படமாக இதையே கருதுகிறேன்.

குறைகள்: டூயட் பாடல், Flash Back காட்சிகள்.


அழகர் சாமியின் குதிரை
சிறுகதையை படமாக்கி அதில் வெற்றிபெற்றிருக்கும் சுசீந்திரனின் காட்சி அமைப்பு மிகவும் பாராட்டிற்கு உரியது. குடும்பத்துடன் பார்த்து, சிரித்து, சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் அடங்கிய திரைப்படம்.

குறைகள் : தேவையற்ற பாடல்கள், இரண்டாம் பாதியை கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.
 


நடுநிசி நாய்கள்
படம் பார்த்த பின் கண்டிப்பாக தூங்க முடியாது. அருவெறுப்பு இருக்கும், வெறுப்பு இருக்கும், கடுப்பு இருக்கும். ஏன் இப்படியெல்லாம் படம் எடுக்கிறார்கள் என்று தோன்றும். But, It's technically well picturised movie. கௌதம் மேனனின் தைரியமான முயற்சி பாராட்டிற்குரியது.

இவை தவிர எனக்கு பிடித்த மற்ற திரைப்படங்கள்:
தெய்வ திருமகள்
மங்காத்தா
கோ
வானம்
போராளி
எங்கேயும் எப்போதும்