Wednesday, March 21, 2012

விழித்திடு தமிழா, வெகுண்டெழு!





















தமிழக அரசியல் எவ்வளவு இழிவாக உள்ளது என்பதற்கு சட்ட சபையில் நேற்று நடந்த சம்பவமே சான்று. இலங்கைக்கு எதிரான ஐநா சபையின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று திமுகவும், ஆதிமுகாவும் வலியுறுத்துவது  போல வெளியில் காட்டி கொண்டுவிட்டு, உள்ளுக்குள் அவர்களின் அரசியல் பலத்தை நிரூபிக்க இரு கட்சிகளும் போட்டா போட்டி போட்டு தமிழக மானத்தை கப்பல் ஏற்றிய நிகழ்ச்சியே மீண்டும் சட்டசபையில் நடந்திருக்கிறது.

தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையும், இலங்கை மீனவர்களும் கொன்று அழித்ததற்கு எதிராக தமிழக கட்சிகள் ஒற்றுமையுடன் போராடி இருந்தால் பல உயிர்கள் காக்கபட்டிருக்கும். கேரளத்தை சேர்ந்த இரண்டு மீனவர்களை இத்தாலிய கப்பலில் இருந்த காவலர்கள் சுட்டு வீழ்தியதர்க்காக, அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் மண்டியிட வைத்து கடமையை எப்படி செய்யவேண்டுமென்று கேரள அரசு தமிழகத்திற்கு பாடம் கற்பித்திருக்கிறது. கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்திலும், திமுகவும், ஆதிமுகவும் அவர் அவர் நிலையாய் நிலையை தெளிவுபடுத்தாமல் ஒருவரின் நிலையை மற்றவர் அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தார்கள். காரணம், எதிர் கட்சியின் நிலைக்கு எதிராக கருத்து கூறி போரட்டங்களில் இறங்கி தங்கள் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக. கடைசியாய் இரு கட்சிகளும் ஒரே பக்கமாக, அதாவது மக்களை அழிக்கும் பக்கத்தில் சாய்ந்திருப்பது தமிழக மக்கள் மீது பரிதாபாத்தை ஏற்படுத்துகிறது.

இதே போல் காவிரி நீர், முல்லை பெரியாறு அணை போன்ற தமிழகத்திற்கு தேவையான அணைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும், இத்தனை ஆண்டுகாலம் ஓட்டு போட்டு ஆட்சி புரிய வாய்ப்பளித்த மக்களை மனதில் வைத்து, இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து போராடி இருந்தால் தமிழகம் முதன்மை மாநிலமாக மாறியிருக்கும். இலங்கை பிரச்சினையில் தமிழர்களை காங்கிரஸ் வஞ்சித்து விட்டது, முல்லை பெரியாறு பிரச்சினையில் கேரளா வஞ்சிக்கிறது, காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகம் நம்மை வஞ்சித்து விட்டது என்று புலம்பும் நம் மக்களை உண்மையில் வஞ்சித்துகொண்டிருப்பது யார்?  இந்த இரண்டு கட்சிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அணைத்து முன்னணி கட்சிகளும், உண்மையான உணர்விருந்தால் தங்கள் கட்சி கொள்கை, சொந்த விரோதம், குடும்ப சண்டை, சாதி மத அரசியல் போன்றவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்று கூடி போராடியிருந்தால் நம் மீனவர்கள் இத்தனை பேரை இழந்திருப்போமா? நம் அடிப்படை உரிமைகளை இழந்திருப்போமா? ஈழத்தில் இத்தனை தமிழர்களை பலி கொடுத்திருப்போமா? அனால் அப்படி ஒரு நிலை தமிழகத்தில் என்றும் வரப்போவது இல்லை.

இனியும் நம் அரசியல்வாதிகளை நம்பி, நாம் இப்படியே தூங்கிகொண்டிருந்தோமேயானால், நம்மை யார்தான் காப்பது? அரசியல், சாதி, மதம் அல்லாத அடையாளம் நமக்கிருக்கிறது, அது தான் தமிழன் என்ற அடையாளம். இனியேனும் நாம் விழித்து, வெகுண்டெழுந்து அரசியல் கட்சிகளை புறக்கணித்து, மக்களை ஒன்றுபடுத்தி, தமிழ் மக்கள் இயக்கமாக செயல்பட்டு ஒன்றுகூடி போராடினாலே ஒழிய நம் அடிப்படை உரிமைகளைகூட நாம் பெற முடியாது.

வெகுண்டேழுவோமா?

No comments:

Post a Comment