Friday, February 10, 2012

ஓட ஓட ஓட தூரம் கொறையல!


Life is a race, Run till you win என்பதே இன்றைய சமூக கொள்கையாகி இருக்கிறது. ஓடுகிறோம் ஓடுகிறோம் வெற்றியை தேடி ஓடிகொண்டே இருக்கிறோம். சிலர் இலக்கை நோக்கி ஓடுகிறோம், சிலர் இலக்கே இல்லாமல் ஓடுகிறோம். சிலர் இலக்கை அடைந்த பின், வேறு ஒரு இலக்கு உருவாக்கி அதை நோக்கி ஓடுகிறோம்.  ஓடும் வேகத்தில் வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிந்துக் கொள்ளாமல், தவறான பாதையில் ஓடி கொண்டே இருக்கிறோம். அதனால்ஓட ஓட தூரம் மட்டும் குறைவதில்லை. காரணம் ஆசைக்கு அளவில்லை. மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து நம்மை எடைபோடுகிறோம். அலுவலக நண்பர்கள் மகிழுந்து வைத்திருக்கிறார்கள் , சொந்த வீடு வைத்திருக்கிறார்கள் என்று ஒப்பிட்டு நாமும் வாங்குகிறோம். காலம் முழுவது கடன் கட்டுகிறோம், நம் சுமையை கூட்டிக்கொள்கிறோம். பின் சுமையை தாங்குவதற்காக நமக்கு பிடிக்காத வேலையாய் இருந்தாலும் அதை உதறிவர முடியாமல், இரவு பகல் பாராமல் அடிமையாய் வேலை செய்ய நேர்கிறது. கணவன் மனைவி இருவரும் உழைத்து கடன் கட்டி, மிஞ்சியதை சேமித்து அதை பிள்ளைகள் கல்விக்காக செலவு செய்கிறோம்.  பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுப்பதற்காக, சிறந்த பள்ளிகளில் பல லட்சம் செலவில் சேர்க்கிறோம். பிள்ளைகளை மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு அவர்கள் சுமையையும் கூட்டுகிறோம். பிள்ளை பருவத்தை மறந்து அவர்களையும் இந்த பந்தயத்தில் இறக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறோம். கல்வி, கலை, விளையாட்டு என்று எல்லாவற்றிலும் நம் பிள்ளைகள் வெற்றியடைய வேண்டும், முதலாவதாக வர வேண்டுமென்று எண்ணுகிறோம்.  அப்படி அவர்கள் வெற்றியடையவில்லை என்றால் அவர்களை மனதளவில் துன்புறுத்துகிறோம். தோல்வியை தாங்கும் பக்குவத்தை அவர்களுக்கு ஏற்படுத்த தவறுகிறோம். வெற்றி ஒன்றே வாழ்கை என்று தவறாக கற்பிக்கிறோம். அவர்களையும் தவறான பாதையில் அழைத்து செல்கிறோம்.

இதன் விளைவாக, கடன் தொல்லையால் தற்கொலை. வேலை போனதால் தற்கொலை, வேலை பழுவால் தற்கொலை, உறவுகள் முறிவால் தற்கொலை இதைவிட தேர்வில் தோல்வியால் அல்லது குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததனால் என்று பள்ளிக்குழந்தைகள் தற்கொலைகள் என தோல்விகளால் துவண்டு விழும் சிறகுகளாய் ஒரு சமுதாயத்தை உருவாக்கிவிட்டோம். நாம் இந்த ஓட்டத்தினால் அடைந்த பயன் தான் என்ன என்று சிந்தித்தால், சொந்த வீடு, மகிழுந்து, வங்கியில் போதுமான பணம், பிள்ளைகள் நல்ல பள்ளிகளில் படிப்பு என்று வெற்றிப்பாதையில் பயணம் செய்யும் மகிழ்ச்சி கொடுத்தாலும், உண்மையில் இந்த வாழ்கை முறையை உற்று கவனித்தால் நாம் அடைந்திருப்பது வெற்றியல்ல, வெற்றியென்று நமக்கு நாமே ஆழ் மனதில் ஏற்படுத்திகொண்ட மாயை என்று தெரியும். இரவு பகல் பாராமல், கணவனும் மனைவியும் உழைத்து, பிள்ளைகளுடன் நேரம் செலவிடாமல், week endல் மட்டும் Mc Donald'sல் chicken burger வாங்கி கொடுத்தால் பிள்ளைகளுக்கு பாசமும் நேசமும் வந்துவிடுமா? சொந்த அண்ணன், தம்பி, தங்கை என்று எல்லாரையும் நம் ஓட்டத்திற்கு தடையாக நினைத்து, தூரத்தில் வைத்து விட்டோம். ஆனால் நம் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பாசத்துடனும் நேசத்துடனும் வளர்வார்கள் என்று நம்புகிறோம். நம் பெற்றோர்களை நம் அருகே வைத்து பேணிக் காக்க மறுக்கிறோம். ஆனால் நம் பிள்ளைகள் நம்மை மதிக்க வேண்டுமென்று நினைக்கிறோம். இந்த ஓட்டத்தின் முடிவில் என்ன நடக்கிறது? நாம் வாழ்க்கை முழுவதும் உழைத்து, பல இன்பங்களை இழந்து, பல துன்பங்களையும், அவமானங்களையும் தாங்கி, பல கனவுகண்டு, வளர்த்த பிள்ளைகள், வளர்ந்த பின் நாம் சேர்த்து வைத்த சொத்துக்காக அவர்கள்சண்டையிட்டு கொள்வதை நம் கண்முன்னே கண்டு வருந்தி சுருங்குகிறோம். ஆனால், அவர்களுக்கு நாம் தான் அப்படி ஒரு தவறான வாழ்கை முறையை கற்பிதிருக்கின்றோம் என்பதை உணர்வதில்லை

இந்த ஓட்டத்தினால், இந்த உலகத்தில் இருக்கும் பல அற்புதங்களை நாம் ரசிப்பதில்லை, நம் பிள்ளைகளையும் ரசிக்க விடுவதில்லை. தோல்வியென்பது நம் வாழ்கையின் அங்கம் என்பதையும், நம் பிள்ளைகளின் தோல்வி அவர்களின் வாழ்க்கை கல்வி என்றும் நாம் புரிந்துகொள்வதில்லை. வாழ்கை பயணத்தில், பாதையில்  இருக்கும் முற்களை ஒதுக்கி மலர்ச்சோலையை சென்றடைவதற்கு பதில், கையில் கத்தியை கொடுத்து வனத்தில் போய் சண்டையிட அனுப்புகிறோம். அவர்கள் முள் எது, மலர் எது, விலங்குகள் எது, என்று தெரியாமல் தவறான அணுகுமுறையால் அரைகுறை வாழ்கை வாழ்கிறார்கள். தாம் வாழ்ந்ததற்கான சுவடுகளே இல்லாத அளவிற்கு ஒரு வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம்.


இப்படிதான் வாழ வேண்டுமென்று விதிகளேதும் இல்லை. எப்படி வாழவேண்டுமென்பது நம் கையில்தான் இருக்கிறது. இனி நம் பிள்ளைகளையாவது நல்ல முறையில் வாழ வழி விடுவோமா?, நல்ல வாழ்க்கை முறையை கற்பிப்போமா?


நன்றி
பாமரத் தமிழன்

Sunday, February 5, 2012

மெக்கானிக் ஷாப் கவுண்டரும், கடலை உருண்டை செந்திலும்!




கவுண்டர்: (கீத்து கொட்டகை மெக்கானிக் ஷாப்பில் கையில் 4x2 ஸ்பானர் வைத்து கொண்டு ஒரு ஓட்டை மோட்டரை ரிப்பேர் செய்வதுபோல் பாவலா பண்ணிக்கொண்டு) ஹே நின்னுகோரி வர்ணம், ஹே ஹே உக்காந்துகோடி வர்ணம், ஹே படுத்துகோடி வர்ணம்.

செந்தில்: (கையில் கடலை உருண்டையை வைத்து கரண்டி கொண்டு வருகிறார்): ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்லே!!!

கவுண்டர்: யார்டா அவன் என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறவன்.

செந்தில்: அது நான் தான்னே!

கவுண்டர்: நீ ராசாவா? அடுப்புல வெச்சி கருக்குன மாறி ஒரு கையி... அத நீ வெக்க வேற செய்வியா?. படுவா பிச்சுபுடுவேன்.

செந்தில்: சும்மா வேலாடதீங்கன்னேன். இன்னக்கி எப்பன்னே நல்ல நேரம்?

கவுண்டர்: நீ வந்துடீல நாயே, இனிமே கெட்டநேரம் தான் நல்லநேரமே கெடயாது. அமா அப்புடி என்ன நல்ல காரியம் பண்ண போறே நாயே நீ?

செந்தில்: அண்ணி காலைல கோழி வாங்குறத பாத்தேன், அதான் நல்ல நேரத்துல சாப்ட போகலாம்னு....

கவுண்டர்: டேய் சிவகுமார் தலையா, நானே காலைல இருந்து இந்த மோட்டார் எப்புடி ரிப்பேர் பண்றதுன்னு தெரியாம ஒரே kanfuse ஆகிபோய் இருக்கேன், என்ன டென்ஷன் பண்ணாதே ஓடி போயிரு.

செந்தில்: லெஸ் டென்ஷன் மோர் வொர்க், மோர் டென்ஷன் லெஸ் வொர்க். be கூல்

கவுண்டர்: இன்னொரு தடவ இங்கிலீஷ் பேசுனே... மவனே மோட்டர on பண்ணி, உன் தலைய உள்ள விட்டுருவேன் படுவா. மூஞ்சிய பாரு ஏழாம் அறிவு சூர்யா மாதிரி, பரதேசி நாயி.

செந்தில்: ஹா ஹா ஹா ஹா

கவுண்டர்: இப்ப எதுக்கு நாயே பம்பரத்த தின்ன பண்ணி மாறி சிரிக்கிறே?

செந்தில்: உலகத்த நெனச்சேன் சிரிச்சேன்!

கவுண்டர்: அப்புடி என்ன நடந்திருச்சி இந்த உலகத்துல?


செந்தில்: ஸ்பானர் எடுத்தவன்லாம் மெக்கானிக்ங்கறானுங்க!

கவுண்டர்: காலைல எந்திரிச்சதுலருந்து, நைட் தூங்குரவரைக்கும், ஓசில எங்க வாங்கி திங்கலாம்னு அலையிற நாயி நீ.... உனக்கு, நக்கல், நய்யாண்டி,  இதுல கருத்து வேற பேசுர.   இனிமே கருத்து பேசுவே..பேசுவே... கம்முனாட்டி.....(என்று ரெண்டு மிதி மிதித்து) ஆமா.... அது என்ன நாயே கையிலே?

செந்தில்: பாத்தா தெரியல, கடலை உருண்ட (என்று அழுது கொண்டே சொல்ல)

கவுண்டர்: ஓஹ இதான் கடலை உரோண்டயா, நான் பாத்ததே இல்லே. எங்க குடு பாப்போம்.

செந்தில்: குடுக்க மாட்டேனே! குடுத்தா நீங்க தூக்கி போட்டுருவீங்களே

கவுண்டர்: குடுக்கலனாலும் நான் புடுகி தூக்கி போடுவேனே......  அப்பறம் உன் வாயிலேயே மிதிப்பேனே......

செந்தில்: அண்ணேன் என்னைய upset பண்ணுனீங்க, அப்பறம் 3வது தெரு ராசாத்தி அக்கா சொல்லச்சொன்னத உங்க கிட்ட சொல்ல மாட்டேன்.

கவுண்டர்: (ஷ்ஹூ என்ன... பண்ணி black மெயில் பண்ணுது. சரி சமாளிப்போம்). டேய் ராசா உன்ன போய் நான் அடிப்பேனாடா. நீ வருவேன்னு உனக்காக, வேர்கடலையும் தேங்கா பார்பியும் வாங்கி வெச்சிருக்கேன், வா ராசா வா! ஆமா அந்த 3வது தெரு ராசாத்தி என்ன சொன்னா?

செந்தில்: நீங்க ரொம்ப புத்திசாலின்னேன்.

கவுண்டர்: உனக்கு தெரியிது இந்த உலகத்துக்கு தெரிய மாட்டேங்குதே. இதெல்லாம் நீ ஊருக்குள்ள போய் சொல்லணும் டா . அண்ணேன் ஒரு நல்லவர், வல்லவர் bend எடுக்கரதல... ஒரு சிறந்தவர் ன்னு... முக்கியமா அந்த 3வது தெரு ராசாத்தி அக்கா கிட்ட போய் சொல்லணும். ஆமா அவ என்ன சொன்னா?

செந்தில்: அந்த வேர் கடலை....

கவுண்டர்: எது?

செந்தில்: அந்த தேங்கா பர்பி

கவுண்டர்: டேய்.... என்ன டென்ஷன் பண்ணாதே... சொல்லிரு

செந்தில்: இந்தா அண்ணி வந்துட்டாங்க அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க ( என்று சொல்லிவிட்டு ஓட்டம் எடுக்க)

பின்னால் இருந்து கேட்டுக்கொண்டிருந்த கவுண்டரின் மனைவி கையில் உலக்கையுடன் வந்து, கீத்து கொட்டகை கிழிய கிழிய கவுண்டரை துவைத்து எடுக்கிறார்.....