Wednesday, December 17, 2014

பெஷாவர் தாக்குதலில் இருந்து இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

 
      
பெஷாவர் தாக்குதலுக்கு கண்டனமும், மக்களுக்கு ஆறுதலும் சொல்லிகொண்டிருக்கும் வேளையில், இதிலிருந்து இந்தியர்களாகிய நாம் கற்றுக்கொள்ள போவது என்ன? பல மதங்கள் சார்ந்த, பல இனங்கள் சார்ந்த மக்கள் வாழும் ஒரு நாட்டின் அரசாங்கம், ஒரு குறிப்பிட்ட மதமோ இனமோ சாராமல் மத சார்பற்ற நடுநிலை அரசாக செயல் பட்டாலே அனைத்து மக்களுக்கும் எந்த ஒரு பாகுபாடுமின்றி நன்மைகளை செய்ய முடியும். அப்படி பாகுபாடின்றி செயல்பட்டாலே மக்களுக்குள் விரிசலும், மோதலும் இன்றி அவர்களை காக்கவும் பேதமின்றி நீதி வழங்கவும் முடியும். மக்களும் தங்கள் மத, இன நம்பிக்கைகளை தங்கள் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளிய மனிதர்களாக வாழ்வார்கள். அவ்வாறின்றி நடுநிலை தவறி எதோ ஒரு இனத்தையோ எதோ ஒரு மதத்தையோ சார்ந்து, அதை போற்றும் அரசாக இருந்தால் பேதமின்றி நீதி வழங்க இயலாது. நீதி வழங்க இயலாத அரசு மக்களை கட்டுக்குள் வைத்துக்கொள்வது சாத்தியம் ஆகாது. மக்கள் அவரவர் மதம், இனம் சார்ந்த நம்பிக்கைகளை வெளிப்படுத்தி தங்களின் நம்பிக்கையே சிறந்தது என்று நிரூபிக்க வெறி கொண்டு கிளம்புவர். இதனால் எண்ணிப்பார்க்க இயலாத மோதல்களும், இழப்புகளும் மக்களுக்கு ஏற்ப்படும். அவ்வாறு பாகிஸ்தான் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழபின் ஒரு அங்கம் தான் பெஷாவர் தாக்குதலில் குழந்தைகளின் இழப்பு.

நம் நாட்டை மத சார்புடைய அரசு ஆளத்துவங்கியுள்ள இந்த  வேளையில் நாம் பாகிஸ்தானின் இழப்பிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? நாம் ஒரு மதமோ அல்லது ஒரு இனமோ சார்ந்த நாடா? நீங்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் உங்கள் மதத்தையோ உங்கள் இனத்தையோ தவிர மற்ற மதத்தினரையோ இனத்தினரையோ விரட்டியடித்து விட்டு இங்கு நீங்கள் மட்டும் வாழ்ந்துவிட முடியுமா?  அனைவரும்  தோழமையுடன் வாழ்வதை தவிர்த்து வேறு வழி தேடினால் என்ன மாதிரியான எதிர்வினைகள் ஏற்ப்படும்? நம் நாட்டிற்கு எது உகந்தது?

மதசார்பற்ற நடுநிலை அரசு!