Friday, February 10, 2012

ஓட ஓட ஓட தூரம் கொறையல!


Life is a race, Run till you win என்பதே இன்றைய சமூக கொள்கையாகி இருக்கிறது. ஓடுகிறோம் ஓடுகிறோம் வெற்றியை தேடி ஓடிகொண்டே இருக்கிறோம். சிலர் இலக்கை நோக்கி ஓடுகிறோம், சிலர் இலக்கே இல்லாமல் ஓடுகிறோம். சிலர் இலக்கை அடைந்த பின், வேறு ஒரு இலக்கு உருவாக்கி அதை நோக்கி ஓடுகிறோம்.  ஓடும் வேகத்தில் வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிந்துக் கொள்ளாமல், தவறான பாதையில் ஓடி கொண்டே இருக்கிறோம். அதனால்ஓட ஓட தூரம் மட்டும் குறைவதில்லை. காரணம் ஆசைக்கு அளவில்லை. மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து நம்மை எடைபோடுகிறோம். அலுவலக நண்பர்கள் மகிழுந்து வைத்திருக்கிறார்கள் , சொந்த வீடு வைத்திருக்கிறார்கள் என்று ஒப்பிட்டு நாமும் வாங்குகிறோம். காலம் முழுவது கடன் கட்டுகிறோம், நம் சுமையை கூட்டிக்கொள்கிறோம். பின் சுமையை தாங்குவதற்காக நமக்கு பிடிக்காத வேலையாய் இருந்தாலும் அதை உதறிவர முடியாமல், இரவு பகல் பாராமல் அடிமையாய் வேலை செய்ய நேர்கிறது. கணவன் மனைவி இருவரும் உழைத்து கடன் கட்டி, மிஞ்சியதை சேமித்து அதை பிள்ளைகள் கல்விக்காக செலவு செய்கிறோம்.  பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுப்பதற்காக, சிறந்த பள்ளிகளில் பல லட்சம் செலவில் சேர்க்கிறோம். பிள்ளைகளை மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு அவர்கள் சுமையையும் கூட்டுகிறோம். பிள்ளை பருவத்தை மறந்து அவர்களையும் இந்த பந்தயத்தில் இறக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறோம். கல்வி, கலை, விளையாட்டு என்று எல்லாவற்றிலும் நம் பிள்ளைகள் வெற்றியடைய வேண்டும், முதலாவதாக வர வேண்டுமென்று எண்ணுகிறோம்.  அப்படி அவர்கள் வெற்றியடையவில்லை என்றால் அவர்களை மனதளவில் துன்புறுத்துகிறோம். தோல்வியை தாங்கும் பக்குவத்தை அவர்களுக்கு ஏற்படுத்த தவறுகிறோம். வெற்றி ஒன்றே வாழ்கை என்று தவறாக கற்பிக்கிறோம். அவர்களையும் தவறான பாதையில் அழைத்து செல்கிறோம்.

இதன் விளைவாக, கடன் தொல்லையால் தற்கொலை. வேலை போனதால் தற்கொலை, வேலை பழுவால் தற்கொலை, உறவுகள் முறிவால் தற்கொலை இதைவிட தேர்வில் தோல்வியால் அல்லது குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததனால் என்று பள்ளிக்குழந்தைகள் தற்கொலைகள் என தோல்விகளால் துவண்டு விழும் சிறகுகளாய் ஒரு சமுதாயத்தை உருவாக்கிவிட்டோம். நாம் இந்த ஓட்டத்தினால் அடைந்த பயன் தான் என்ன என்று சிந்தித்தால், சொந்த வீடு, மகிழுந்து, வங்கியில் போதுமான பணம், பிள்ளைகள் நல்ல பள்ளிகளில் படிப்பு என்று வெற்றிப்பாதையில் பயணம் செய்யும் மகிழ்ச்சி கொடுத்தாலும், உண்மையில் இந்த வாழ்கை முறையை உற்று கவனித்தால் நாம் அடைந்திருப்பது வெற்றியல்ல, வெற்றியென்று நமக்கு நாமே ஆழ் மனதில் ஏற்படுத்திகொண்ட மாயை என்று தெரியும். இரவு பகல் பாராமல், கணவனும் மனைவியும் உழைத்து, பிள்ளைகளுடன் நேரம் செலவிடாமல், week endல் மட்டும் Mc Donald'sல் chicken burger வாங்கி கொடுத்தால் பிள்ளைகளுக்கு பாசமும் நேசமும் வந்துவிடுமா? சொந்த அண்ணன், தம்பி, தங்கை என்று எல்லாரையும் நம் ஓட்டத்திற்கு தடையாக நினைத்து, தூரத்தில் வைத்து விட்டோம். ஆனால் நம் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பாசத்துடனும் நேசத்துடனும் வளர்வார்கள் என்று நம்புகிறோம். நம் பெற்றோர்களை நம் அருகே வைத்து பேணிக் காக்க மறுக்கிறோம். ஆனால் நம் பிள்ளைகள் நம்மை மதிக்க வேண்டுமென்று நினைக்கிறோம். இந்த ஓட்டத்தின் முடிவில் என்ன நடக்கிறது? நாம் வாழ்க்கை முழுவதும் உழைத்து, பல இன்பங்களை இழந்து, பல துன்பங்களையும், அவமானங்களையும் தாங்கி, பல கனவுகண்டு, வளர்த்த பிள்ளைகள், வளர்ந்த பின் நாம் சேர்த்து வைத்த சொத்துக்காக அவர்கள்சண்டையிட்டு கொள்வதை நம் கண்முன்னே கண்டு வருந்தி சுருங்குகிறோம். ஆனால், அவர்களுக்கு நாம் தான் அப்படி ஒரு தவறான வாழ்கை முறையை கற்பிதிருக்கின்றோம் என்பதை உணர்வதில்லை

இந்த ஓட்டத்தினால், இந்த உலகத்தில் இருக்கும் பல அற்புதங்களை நாம் ரசிப்பதில்லை, நம் பிள்ளைகளையும் ரசிக்க விடுவதில்லை. தோல்வியென்பது நம் வாழ்கையின் அங்கம் என்பதையும், நம் பிள்ளைகளின் தோல்வி அவர்களின் வாழ்க்கை கல்வி என்றும் நாம் புரிந்துகொள்வதில்லை. வாழ்கை பயணத்தில், பாதையில்  இருக்கும் முற்களை ஒதுக்கி மலர்ச்சோலையை சென்றடைவதற்கு பதில், கையில் கத்தியை கொடுத்து வனத்தில் போய் சண்டையிட அனுப்புகிறோம். அவர்கள் முள் எது, மலர் எது, விலங்குகள் எது, என்று தெரியாமல் தவறான அணுகுமுறையால் அரைகுறை வாழ்கை வாழ்கிறார்கள். தாம் வாழ்ந்ததற்கான சுவடுகளே இல்லாத அளவிற்கு ஒரு வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம்.


இப்படிதான் வாழ வேண்டுமென்று விதிகளேதும் இல்லை. எப்படி வாழவேண்டுமென்பது நம் கையில்தான் இருக்கிறது. இனி நம் பிள்ளைகளையாவது நல்ல முறையில் வாழ வழி விடுவோமா?, நல்ல வாழ்க்கை முறையை கற்பிப்போமா?


நன்றி
பாமரத் தமிழன்

4 comments:

  1. Neeeya ezhudhirukanu Ram acharya padranga ivalo seriousana vishayatha. Ana enakku acharyama illa.
    Nice thought brought out in a decent writing..:)
    Keep going!

    -jp

    ReplyDelete
    Replies
    1. நல்ல கருத்து. ஆனாலும் நம்மால் ஓடாமல் நிற்க முடிய வில்லையே. ஓடி தானே ஆக வேண்டும் இல்லையேல் சந்நியாசி ஆக போக வேண்டியதுதான் - சோமு.

      Delete
    2. ippadi oru artham illadha vaalkai vaalvadarku...andha vaalkai evalovo mel...

      Really fantastic article da bharu...

      Delete
  2. Experience makes a man perfect .... Nice article.

    ReplyDelete