Tuesday, January 31, 2012

அணு உலைகள் - ரஸ்கா ரிஸ்கா?


 
 அணு உலைகள் பாதுகாப்பானது அல்ல என்றும், நம் நாட்டில் அணு உலைகளின் கழிவுகள் கண்டிப்பாக முறையாக அப்புறபடுத்த போவதில்லை என்றும், இதனால் ஏற்படப்போகும் சுற்றுப்புற கேடுகளையும், சுகாதார சீர்கேடுகளையும் இந்திய மக்களாகிய நாம் தான் அனுபவித்தாக வேண்டியது இருக்கும் என்றும் நாம் அனைவரும் அறிவோம். அது மட்டுமின்றி அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் சாமான்யர்களாகிய நம் கற்பனையை விட மிக கொடியது என்பதை நாம் உணரவேண்டும். போபால் போன்ற சாதாரண ரசாயன விபத்தையே தடுக்க முடியாத நம் நாடு, விபத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு சேர வேண்டிய உதவியை கூட செய்ய தவறிய நம் நாட்டு அரசாங்கம், அணு உலைகளை நிறுவி, எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செவ்வனே செய்து, அதை பாதுகாப்பாக இயக்கி மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் என்பதில் எனக்கு கடுகளவும் நம்பிக்கை இல்லை. அப்படி இருக்கையில் இந்த அணு உலைகளால் நமக்கு என்னதான் நன்மைகள் வந்துவிடபோகிறது? எதற்காக இந்த ரிஸ்கை நாம் ரஸ்க்கு சாப்பிடுவது போல் எடுக்க வேண்டும்? 

அணு உலைகள் பற்றி மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையே நிலவுகிறது. என்னுடைய குழப்ப நிலையை போக்கியது எழுத்தாளர், அரசியல் விமர்சகர் திரு ஞானி அவர்களின் "ஏன் இந்த உலை வெறி?" என்ற புத்தகம்.  அனைவரும் "ஏன் இந்த உலை வெறி?" என்ற புத்தகத்தை வாங்கி படித்து தெளிவுற வேண்டுமென்பதே எனது எண்ணம். வாங்கி படிக்க பணமோ, நேரமோ, வாய்ப்போ இல்லாதவர்களுக்காக திரு ஞானி அவர்களே அவரது சொந்த இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கும் இந்த புத்தகத்தை படித்து கொள்ளலாம்.

நான் படித்ததில் இருந்து சிலவற்றை தொகுத்து கொடுத்துள்ளேன்

இதுவரை நடந்த அணு விபத்துகள்
1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில் நடந்திருக்கின்றன என்று நம்ப தகுந்த புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. அதனால் ஏற்பட்ட உயிர், உடமை, வாழ்க்கை சேத நஷ்டங்களின் மதிப்பு மட்டும் வருடத்துக்கு சுமார் 332 மில்லியன் டாலர்கள். செர்னோபில் விபத்தில்  மட்டும் 2000 பேர் இறந்ததாக அப்போது சோவியத்அதிபராக இருந்த கோர்பசேவே சொல்லியிருக்கிறார்.1986லிருந்து 2004 வரை செர்னோபில் விபத்துக் கதிர்வீச்சால் நோயுற்று செத்தவர்கள் மொத்தம் ஒன்பது லட்சத்து 85 ஆயிரம் பேர். இன்னும் 20 ஆயிரம் வருடங்களுக்கு கதிர் வீச்சு நீடிக்கும் என்பதால் தொடர்ந்து வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் மெல்ல மெல்ல புற்று நோய் போன்றவற்றால் இறந்துகொண்டிருப்பார்கள்.உலையை சுற்றி ஒரு லட்சம் சதுர மைல் பரப்புக்கு அதாவது சுமாராக முழுத் தமிழ்நாடு அளவுக்கு கதிரியக்கம் கடுமையாக பதித்திருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கும். செர்னோபில்லின் கதிர்வீச்சுக்குள்ளானவை ஐரோப்பாவில் 40 சதவிகித இடம், ஆசியாவில் எட்டு சதவிகிதப் பரப்பு. இங்கெல்லாம் மொத்தமாக 40 கோடி மக்கள் கதிரியக்கத்துக்கு உள்ளானார்கள். உலையை சுற்றி வெறும் 30 கிலோமீட்டர் பகுதியில்

இருந்த நான்கு லட்சம் பேரை உடனே வெளியேற்ற வேண்டியதாயிற்று. இன்னும் 5 கோடி பேர் ஒரு கோடி குழந்தைகள் உட்பட கதிரியக்க ஆபத்தான பகுதியில் இருக்கிறார்கள்.

கூடங்குளம் அணு உலையை ஆரம்பத்திலேயே எதிர்க்காமல் இப்போது எதிர்ப்பது ஏன் ?
கூடங்குளம் அணு உலை திட்டம் ஆரம்பத்தில் மட்டுமல்ல, அணு மின்சார எதிர்ப்புகள், அதற்க்கு முன் பல ஆண்டுகளாகவே  இருந்து வந்தன. இப்போது தான் அது உச்சகட்ட நிலையை அடைந்திருப்பதால்,  வெளி உலகிற்கு அதாவது நம்மை போன்ற பாமர மக்களுக்கும் தெரிய வந்திருக்கிறது.

இந்தியாவில் மின்சாரத்துக்கு வேறு வழியே இல்லை. அணு மின்சாரத்தைத்தான் நம்பியாகவேண்டும் என்கிறார்களே ?
அது ஒரு கடைந்தெடுத்த பொய். அணு மின்சாரம் பற்றி சொல்லப்படும் நான்கு பிரதானப் பொய்களில் இதுவும் ஒன்று. 1. அணு மின்சாரம் தூய்மையானது.                               2. பாதுகாப்பானது. 3.விலை மலிவானது. 4. இதை விட்டால் இனி வேறு வழியில்லை. முதல் இரண்டும் எப்படிப்பட்ட மோசடிகள் என்பதை மேலே பார்த்துவிட்டோம். இனி அடுத்த இரண்டைப் பார்ப்போம். விலை மலிவானது என்பது அணுசக்தி துறையின் அடுக்கடுக்கான பொய்களில் இன்னொன்று. அவ்வளவுதான். எந்த அடிப்படையில் விலையைக் கணக்கிடுகிறார்கள் என்பதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். ஒரு அணு உலையைக் கட்ட 10 முதல் 15 வருடமாகிறது.ஒவ்வொரு அணு உலையும் கட்ட ஆரம்பிக்கும்போது சொல்லும் மதிப்பீடு வேறு. பத்து வருடம் கழித்துக் கட்டி முடிக்கும்போது செலவு பல மடங்கு அதிகம். அப்படித்தான் கூடங்குளம் உலைக்கும் ஆரம்பத்தில் 6000 கோடி என்றார்கள். கடைசியில் இது 13 ஆயிரம் கோடியாகிவிட்டது. அது அதிகபட்சம் 30 வருடம் இயங்கலாம்.பின்னர் மூடுவிழா, சமாதி கட்ட இன்னொரு பத்து வருடம் ஆகும். இந்த ஐம்பது வருடங்களில் ஆகும் செலவின் அடிப்படையில்
முப்பது வருடங்களில் தயாரித்த மின்சாரத்துக்கு விலை நிர்ணயித்தால் அந்த விலை எவ்வளவு என்று சொல்லவேண்டும். பிறகு அணு உலையையும் கழிவுகளையும் லட்சக்கணக்கான வருடங்களுக்கு பாதுகாக்கும் செலவுக்கு எங்கிருந்து பணம் வரும்?
வெறுமே உலை இயங்கும்போது ஆகும் செலவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மின்சாரத் தயாரிப்பு செலவைக் கணக்கிட்டால் கூட இதில் எல்லா செலவுகளையும் கணக்கிட்டு சொல்வதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு அணு உலைக்கு தினசரி பத்து லட்சம் லிட்டர் நல்ல தண்ணீர் தேவைப்படுகிறது. லிட்டருக்கு
எவ்வளவு காசு அடிப்படையில் இந்த செலவு கணக்கிடப்படும் ?
அணு உலைகளில் பயன்படுத்தும் கன நீர் விலை எவ்வளவு ? ஆனால் அரசு கொடுக்கும் மான்யம் எவ்வளவு ? கைகா அணு உலைகளில் பயன்படுத்தும் கன நீர் செலவுக் கணக்கை மதிப்பிட்டபோது ஒரு உலைக்கு கன நீருக்காக மட்டும் அரசு தரும் மான்யம் 1450 கோடி ரூபாய் என்பது தெரியவந்தது. இது உலையை
நிறுவிய முதலீட்டுச் செலவில் 17 சதவிகிதம் !
இது தவிர அணு உலைகளில் நடக்கும் விபத்துகளினால் ஆகும் இழப்பு, செலவு இவற்றையெல்லாம் கணக்கிடவேண்டும். புகோஷிமா விபத்துக்குப் பிறகு ஜப்பான் அணுமின்சார தயாரிப்புச் செலவில் விபத்துகளினால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பை சந்திக்க ஆகும் செலவுகளையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும் என்று முடிவு
செய்திருக்கிறது. அப்படிச் செய்தால் விலை அதிகமானது என்று சொல்லப்படும் சூரிய சக்தி மின்சாரத்தை விட அணுமின்சாரத்தின் விலை அதிகமாகிவிடும்.
கல்பாக்கம் அணு உலைகள் 1987ல் இரண்டு வருடங்கள் சிக்கல்களினால் மூடிக் கிடந்த சமயத்தில் ஏற்பட்ட இழப்பு 30 கோடி டாலர்கள். இங்கே 2002ல் சோடியம் கசிவு ஏற்பட்ட விபத்தில் இழப்பு மூன்று கோடி டாலர்கள். . தாரப்பூர் அணு மின் நிலையங்கள்தான் உலகிலேயே மிக அதிகமான கதிர் வீச்சு சிக்கல்களுக்குள்ளானவை.
இங்கே 1989ல் ஐயோடின் கசிவு எற்பட்ட விபத்தில் இழப்பு சுமார் ௮ கோடி டாலர். ராஜஸ்தான் கோட்டா அணு உலையில் 1995ல் ஹீலியம் கசிவு ஏற்பட்டு 2 வருடம் பாதிப்பினால் ஏற்பட்ட இழப்பு 28 கோடி டாலர்.

ஆனால் இனி இதை விட்டால் வேறு வழி கிடையாது என்கிறார்களே ?
அணுசக்தி துறையின் பூச்சாண்டி அது. அதை நம்பி வேறு வழிகளை நாம் மேற்கொள்ளாமல், அணுமின்சாரத்தை நம்பினால், நாம்தான் முட்டாள்களாகிவிடுவோம். அணுமின்சாரம் இதுவரை எவ்வளவுகிடைத்திருக்கிறது என்ற கணக்கை இத்தனை மெகாவாட், இத்தனை யூனிட்டுகள் என்று சொல்லி பிரும்மாண்டமாகக் காட்டி ஏமாற்றுகிறார்கள். அத்தனையும் இந்தியாவின் மொத்த மின்சாரத் தயாரிப்பில் வெறும் 2.3 சதவிகிதம்தான். இதற்குத்தான் கோடிக்கணக்கான ரூபாய்களை ஐம்பது வருடங்களாக வீணடித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த 20 வருடங்கள் இன்னும் பல்லாயிரம் கோடிகளைக் கொட்டினாலும் அணு மின்சாரத்திலிருந்து பத்து சதவிகிதத்தைக் கூட நாம் அடையும் வாய்ப்பு இல்லை.

சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கச் செலவு அதிகம் என்று அணு விஞ்ஞானிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் பிரசாரம் செய்கிறார்களே ?
எதை விட இது செலவு அதிகம் ? அணுமின்சாரத்தின் அசல் விலையை அவர்கள் மூடி மறைத்துவிட்டு மற்றவற்றை விலை அதிகம் என்று பொய் பிரசாரம்தான் செய்கிறார்கள். ஜெய்தாபூரில் பிரெஞ்ச் கம்பெனியிடமிருந்து அணு உலை வாங்கி நிறுவுவதற்கு அவர்கள் போட்டிருக்கும் மதிப்பீடு ஒரு மெகாவாட்டுக்கு 21 கோடி ரூபாய். ஆனால் ஏழு இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க தனியாருக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. அங்கே நிறுவும் செலவு ஒரு மெகாவாட்டுக்கு 12 கோடி ரூபாய்தான். நிறுவியபின்னர் பராமரிப்பு செலவும் அணு உலையை விடக் குறைவு. ஆபத்து துளியும் இல்லை. அணு உலையை லட்சக்கணக்கான வருடத்துக்குப் பாதுகாத்தே திவாலாகிவிடுவோம்.
இப்போது சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களின் விலை படு வேகமாக சரிந்து வருகிறது. சோலார் போட்டோவோல்டேய்க் செல் தயாரிக்கத் தேவைப்படும் பாலி-சிலிக்கான் விலை கடந்த மூன்று வருடங்களில் 93 சதவிகிதம் குறைந்துவிட்டது. அதனால் இந்த மின்சாரம் தயாரிக்க முன்வரும் தனியார் கம்பெனிகள் அரசுக்கு மின்சாரத்தை முன்பை விடக் குறைந்த விலையில் தர முன்வந்துவிட்டன. டிசம்பர் 2011ல் நடந்த ஏலத்தில் இந்திய அரசு ஒரு மெகாவாட்/மணி அளவு மின்சாரத்தை 15,390 ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று அறிவித்திருந்தது. ஆனால் பிரான்சின் இரண்டாவது பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனமான சோலேர் டைரக்ட் 7490 ரூபாய்க்கே விற்பதாக ஏலம் எடுத்திருக்கிறது. இது ஒரு வருடம் முன்பு இருந்த விலையை விட 34 சதவிகிதம் குறைவு. எனவே 2015க்குள் சூரிய மின்சாரத்தின் விலையும் இப்போது நிலக்கரியால் தயாரிக்கும் அனல் மின்சாரத்தின் விலையும் சமமாகிவிடும் என்று கருதுகிறார்கள்.

ஆனால் இன்னமும் உலகம் முழுவதும் புது அணு உலைகள் தொடங்கப்படுவதாக அணு உலை ஆதரவாளர்கள் சொல்கிறார்களே?
அதுவும் பொய்தான். ஒவ்வொரு தகவலாகப் பார்க்கலாம். 1. நான்கு வருடங்களாக் உலக அளவில் அணு மின்சாரத் தயாரிப்பு அளவு தேக்கமடைந்தது மட்டுமல்ல, குறைந்தும் வருகிறது. 2006ல் 15.2 சதவிகிதமாக இருந்தது 2010ல் 13.5 ஆகிவிட்டது. 2. அதே போல உலக அளவில் இருக்கும் அணுமின்சாரத் தயாரிப்புக்கான நிறுவப்பட்ட திறன் அளவும் குறைந்துவிட்டது. 2006ல் இது 8.7 சதவிகிதம். 2010ல் 7.4தான். 3.வருகிற 2030க்குள் மொத்தம் 143 உலைகள் வயதாகிவிட்டதால் மூடியாக வேண்டிய நிலையில் நிரந்தர சமாதி வைக்கப்படவேண்டியவை. எனவே 2030ல் உலக நிலையைப் பார்த்தால் இப்போதுள்ளதை விட 30 சதவிகிதம் அணு உலைகள் குறைவாகவே இருக்கும். ஜெர்மனி 2020க்குள் தன் அணு உலைகள் அனிஅத்தையும் மூடப் போகிறது. ஆஸ்திரியா, ஸ்பெயின், ஸ்வீடன், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளும் தங்கள் அணு உலைகளைக் குறைக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன. 4. இப்போது மொத்தமாக 64 உலைகள் கட்டப்பட்டு வருவதாக உலக அணுசக்தி முகமை தெரிவித்தது. இதில் 12 உலைகள் 20 வருடங்களாகக் கட்டப்பட்டு வருபவை. மொத்தம் 64ல் 43 உலைகள் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய மூன்றே நாடுகளில் கட்டப்படுபவை. மேலை நாடுகளில் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

இன்னும் ஆழமாக பல செய்திகளை தந்துள்ளார் திரு ஞானி அவர்கள். தயவு செய்து கீழே உள்ள linkய் click  செய்யவும்

நன்றி
பாமர தமிழன்

2 comments:

  1. Thanks for your summary ....
    - Sundhar

    ReplyDelete
  2. Excellent Article. One more information. Australia is the major source of Uranium. This country does not have any nuclear reactor as of now. So India is a good market to trade uranium for the western countries. For their survival our politicians say YES for everything. Cannot see such a Government in the entire world who doesn't care for their own people :(

    ReplyDelete