Thursday, October 30, 2008

தொடரட்டும் ஒற்றுமை - குமுதம் தலையங்கம்

இந்த வார குமுதம் தலையங்கத்தில் பிரசிருதிருந்த அருமையான கட்டுரை வருமாறு:

அபூர்வமாக எப்போதாவது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடையே எழும் ஒற்றுமையான குரல் இந்த முறை - இலங்கைத் தமிழர்களுக்காக எழுந்திருக்கிறது.

சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் - தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதற்கு இருவாரக் கெடு விதிக்கப்பட்டிருப்பது & உறுதியான தீர்மானமே.

ஈழப்பிரச்னையில் இதுவரை ஒதுங்கி வந்த அ.தி.மு.க.வும் கரிசனத்துடன் குரல் எழுப்பியிருக்கிறது. தமிழக காங்கிரஸும் இந்த அலையிலிருந்து தனித்து ஒதுங்கியிருக்க முடியவில்லை.

திரைப்படக் கலைஞர்களும் ஒன்று சேர்ந்து ராமேஸ்வரத்தில் கண்டனப் பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்தித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இலங்கையில் போர் தீவிரமடைந்தாலும், அங்குள்ள செய்திகளை சரிவரத் தெரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு இலங்கை அரசின் கெடுபிடிகள், ஐ.நா.வின் தன்னார்வத் தொண்டு அமைப்பைக்கூட இலங்கையிலிருந்து வெளியேற்றும் நெருக்கடிகள், புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிளிநொச்சியையும் முல்லைத் தீவையும் கைப்பற்ற இலங்கை அரசு நடத்தும் தீவிரத் தாக்குதல்கள்...

இந்தப் பின்னணியில் இலங்கையில் மூன்று லட்சம் பேர் வரை அகதிகளாகி, புகலிடம் தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு உணவு, மருந்தைக் கொடுப்பதைக்கூடத் தடுத்துக் கொண்டிருக்கிற நிலையில் & தமிழகத்திலிருந்து எழுந்திருக்கிற ஒற்றுமையான கண்டனக் குரல் முக்கியமானது. அத்தியாவசியமானதும்கூட.

இலங்கை அரசுக்கு இதுவரை பல உதவிகளைச் செய்திருக்கிற மத்திய அரசு, இனியாவது அதை அடியோடு நிறுத்தி அங்குள்ள தமிழர்களின் எதிர்காலம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அதுவரை தமிழகத்தில் உள்ள அனைவரின் ஒற்றுமைக்குரலும் ஓங்கித் தொடரட்டும்..

இந்த கட்டுரைக்காக பாமர தமிழனின் நன்றி

source: www.kumudham.com

No comments:

Post a Comment